முள்ளிவாய்க்கால் கஞ்சி விவகாரம்: கனடாவில் இலங்கை இராஜதந்திரிகளுக்குப் பதிலளிக்க சிரமம்

திருகோணமலை – சேனையூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றச்சாட்டில் அண்மையில் நால்வர் கைது செய்யப்பட்டமை மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதில் கனடாவிலுள்ள இலங்கை இராஜதந்திர அதிகாரிகள் சிரமத்தை எதிர்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கனடாவில் புலம்பெயர் தமிழர்கள் பெருமளவு வாழ்கின்ற நிலையில் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராகக் கடும் அழுத்தங்களை கனடா எதிர்நோக்கி வருகின்றது.

திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய சம்பவம் தொடர்பில் கனடாவிலுள்ள தமிழ் உரிமை ஆர்வலர்களால் கேள்வி எழுப்பப்படுகின்ற நிலையில் இலங்கை அதிகாரிகள் பதிலளிக்க கூட முடியாதுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி இலங்கையில் போர் நிறைவுக்கு வந்தது.

2022 ஆம் ஆண்டில் மே 18 ஆம் திகதியை இறுதிப் போரில் உயிரிழந்தவர்களின் நினைவு தினமாக கனடா நாடாளுமன்றம் அங்கீகரித்துள்ளது.

இறுதிப் போர் குறித்து கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த வருடம் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார்.

அந்த அறிக்கையில் “இலங்கையில் 14 ஆண்டுகளுக்கு முன்பு நிறைவுக்கு வந்த ஆயுதப் போரின் போது ஏற்பட்ட துயரமான உயிர் இழப்புகளை இன்று நாம் நினைவுகூருகிறோம்.

முள்ளிவாய்க்கால் உயிரிழப்புகள் உட்பட, மேலும் பலர் காணாமல் போயுள்ளனர். காயமடைந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள், உயிர் பிழைத்தவர்கள் மற்றும் அவர்களின் அன்புக்குரியவர்கள், இந்த அர்த்தமற்ற வன்முறையால் ஏற்படும் வலியுடன் தொடர்ந்து வாழ்கிறார்கள்” என குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் அந்த அறிக்கையை இலங்கை அரசாங்கம் முற்றாக நிராகரித்தது.

Recommended For You

About the Author: admin