பொதுமக்களை பிடித்து, சுட்டுக் கொல்கின்றனர்’: ரஷ்யா மீது உக்ரெய்ன் குற்றச்சாட்டு

உக்ரெய்னின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள கார்கிவ் பிராந்தியத்தில் வசிப்பவர்களை ரஷ்யா படுகொலை செய்வதாக உக்ரெய்ன் குற்றம் சாட்டியுள்ளது.

அண்மைக்காலமாக உக்ரெய்னுக்கு எதிரான போரில் ரஷ்யா முன்னேற்றம் கண்டு வருகின்றது.

இதுகுறித்து உக்ரெயன் உள்துறை அமைச்சர் இகார் க்ளிமென்கோ அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்,’ரஷ்ய எல்லையிலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வாவ்சான்ஸ்க் நகரைச் சுற்றி ரஷ்ய படையினர் முன்னேறி வருவதோடு அங்குள்ள பொதுமக்களை கைதியாகவும் பிடித்துச் செல்கின்றனர்.

ரஷ்ய படையினர், அவர்கள் கைப்பற்றிய பகுதிகளிலுள்ள பொதுமக்களை வெளியேற விடாமல் அவர்களை கைது செய்து சுரங்கப் பகுதிகளில் அடைத்து வைக்கின்றனர்.

அதுமட்டுமின்றி தங்கள் உத்தரவுக்கு அடிபணியாத பொதுமக்களை ரஷ்ய படையினர் சுட்டுக்கொல்கின்றனர் என்ற தகவலும் கிடைக்கப் பெற்றுள்ளது. இது மிகப் பெரிய போர்க்குற்றம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் உக்ரெய்ன் மீது ரஷ்யா படையெடுக்க ஆரம்பித்தது. அதில் உக்ரெய்னின் கிழக்கு, தெற்கு பிராந்தியங்களான டொனட்ஸ்க், லுஹான்ஸ்க், கெர்சான், ஸபோரிஷியா ஆகிய பகுதிகளை கைப்பற்றியது.

தற்போது கார்கிவ் பகுதியையும் கைப்பற்றுவதை நோக்கமாகக் கொண்டு ரஷ்யா முன்னேறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin