அமெரிக்காவின் காலனியாக மாறுகின்றதா இலங்கை?

அமெரிக்காவின் நலன் கருதியே ஆய்வுக் கப்பல்கள் இலங்கைக்கு வருவதற்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது என்ற உண்மைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

தனது கட்சியின் தலைமையகத்தில் நேற்று (16.05.2024) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான அடுத்த அமெரிக்கத் தூதுவராக பரிந்துரைக்கப்பட்டுள்ள எலிசபெத் ஹோர்ஸ்ட், வெளிவிவகாரங்களுக்கான செனட் குழு முன்னிலையில் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

இதன்போது ஆய்வுக்கப்பல்கள் குறித்தும் அவர் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார்.

அவர் செனட்டில் கூறியது போல், அமெரிக்காவின் நலன் கருதியே ஒரு வருடத்திற்கு ஆய்வுக் கப்பல்கள் இலங்கைக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆய்வுக் கப்பல்கள் விடயத்தில் இலங்கை நடந்துகொண்ட விதம் அதனை உறுதிப்படுத்துவதாய் அமைந்துள்ளது.

சீனாவின் Xiang Yang Hong 3 என்ற ஆய்வுக் கப்பல் இலங்கைக்கு வர அனுமதிக்கப்பட்டதுடன், அமெரிக்காவின் எதிர்ப்பை அடுத்து அனைத்து ஆய்வுக் கப்பல்களும் ஒரு வருட காலத்திற்கு இலங்கைக்குள் வர தடை விதிக்கப்பட்டு, சீனக் கப்பலுக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதி மறைமுகமாக நீக்கப்பட்டது.

ஆனால் தடை அமுலில் இருக்கும் போதே அமெரிக்க ஆராய்ச்சிக் கப்பலும், ஜெர்மனியின் ஆராய்ச்சிக் கப்பலும் கொழும்புத் துறைமுகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டன.

பொருட்களைப் பெற்றுக்கொள்ளவே குறித்த கப்பல்கள் துறைமுகத்திற்குள் நுழைந்ததாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆனால் சீனக் கப்பலுக்கு பொருட்களைப் பெறக் கூட அனுமதிக்கப்படவில்லை.

அமெரிக்காவுக்கு விரோதமான நாடுகளுக்கு இந்தத் தடை பொருந்தினாலும், அமெரிக்காவுக்கும், அமெரிக்காவுக்கு நட்பு நாடுகளுக்கும் இந்தத் தடை பாதிப்பை ஏற்படுத்தாது என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

சுருக்கமாகச் சொன்னால், எந்த ஆராய்ச்சிக் கப்பல்கள் இலங்கைக்குள் நுழைய வேண்டும் என்பதை அமெரிக்கா இப்போது தீர்மானிக்கிறது.

இதன் மூலம் இலங்கை அமெரிக்காவின் காலனியாக மாறியுள்ளது.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin