2024 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தானுக்குப் பிறகு ப்ளேஓப் சுற்றுக்கு தகுதி பெற்ற மூன்றாவது அணியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மாறியுள்ளது.
குஜராத் அணிக்கு எதிரான நேற்றையப் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், சன்ரைசர்ஸ் அணி 15 புள்ளிகளுடன் ப்ளேஓப் வாய்ப்பை உறுதிப்படுத்தியுள்ளது.
2020 ஆம் ஆண்டுக்கு பின்னர் முதல் முறையாக சன்ரைசர்ஸ் அணி ப்ளேஓப் சுற்றுக்கு முன்னேரியுள்ளது.
2021, 2022 மற்றும் 2023 ஐபிஎல் தொடர்களில் 8வது, 8வது மற்றும் 10வது இடத்தைப் பிடித்தனர்.
இந்நிலையில், சன்ரைசர்ஸ் அணி ப்ளேஓப் சுற்றுக்கு முன்னேறியதை அந்த அணியின் ரசிகர்கள் கொண்டாடியுள்ளனர்.
சன்ரைசர்ஸ் அணிக்கு மேலும் ஒருப் போட்டி எஞ்சியுள்ளது. இந்தப் போட்டியில் வெற்றிபெற்றால் புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேற வாய்ப்புள்ளது.
எனினும், அதற்கு ராஜஸ்தான் அணி தனது இறுதி லீக் ஆட்டத்தில் தோல்வியடைய வேண்டும்.
இவ்வாறு நடந்தால் சன்ரைசர்ஸ் அணி தகுதிகான் (Qualifier 1) போட்டியில் விளையாடுவதையும் உறுதிப்படுத்திக்கொள்ளும். தற்போதைய நிலையில், கொல்கத்தா அணி மட்டுமே தகுதிகான் சுற்றில் விளையாடுவதை உறுதிப்படுத்திள்ளது.
நேற்றையப் போட்டி கைவிடப்பட்ட நிலையில், புள்ளிப்பட்டியலில் ஏற்பட்ட மாற்றத்தால் டெல்லி மற்றும் லக்னோ அணிகளின் ப்ளேஓப் நம்பிக்கை முடிவுக்கு வந்துள்ளது.
இந்நிலையில், ப்ளேஓப் சுற்றுக்கு தகுதிப்பெற இன்னும் ஒரு அணிக்கு மட்டுமே வாய்ப்பிருக்கும் நிலையில், சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே போட்டி வலுத்துள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான் போட்டி எதிர்வரும் 18 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இந்த போட்டியில் சென்னை அணி வெற்றிபெற்றால் ப்ளேஓப் சுற்றுக்கு முன்னேறும்.
மாறாக பெங்களூரு அணி பாரிய வெற்றியை பதிவு செய்தால் நிகர ஓட்டங்களின் அடிப்படையில் அந்த அணி ப்ளேஓப் சுற்றுக்கு முன்னேறும்.
எவ்வாறாயினும், இந்தப் போட்டியும் மழையால் கைவிடப்பட்டால் சென்னை அணி ப்ளேஓப் சுற்றுக்கு முன்னேறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.