குமுதினி படகு படுகொலை சம்பவம்- 39 ஆண்டுகள் நிறைவு!

குமுதினி படகில் பயணித்த 36 தமிழர்கள் இலங்கை கடற்படை அதிகாரிகளால் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 39 ஆண்டுகள் நிறைவடைகிறது.

ஜே.ஆர்.ஜயவர்த்தனா தலைமையிலான ஐக்கியதேசியக் கட்சி அரசாங்கம் அப்போது பதவியில் இருந்தது.

1985 ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதி நெடுந்தீவின் மாவலித்துறையிலிருந்து நயினாதீவின் குறிக்காட்டுவான் துறைமுகத்திற்கு 64 பயணிகளுடன் பயணித்த குமுதினி படகை இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் வழிமறித்தனர்.

குழந்தைகள், பெண்கள் உட்பட மொத்தம் 36 பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர்.

முப்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் காப்பாற்றப்பட்டனர்.

அந்த துயர சம்பவத்தின் 39 ஆண்டுகள் நினைவு தினம் இன்றாகும்.

நேரில் கண்டவர்களின் சாட்சியத்தின் படி, இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படும் ஆறு நபர்கள் படகில் ஏறினர்.

படகில் பயணம் செய்தவர்களை முன்னே வரும்படி அழைத்து ஒவ்வோருவரையும் தமது பெயர், வயது, முகவரி, எங்கு செல்கிறார்கள் போன்ற விவரங்களை உரத்துக் கூறும்படி பணிக்கப்பட்டார்கள்.

பின்னர் அவர்களை வாள்களாலும் கத்திகளாலும் வெட்டிக் கொன்றனர்

எனினும் இலங்கை கடற்படையின் தலையீட்டை அப்போதைய தேசிய பாதுகாப்பு அமைச்சராக இருந்த லலித் அத்துலத்முதலி மறுத்தார்.

படுகொலை நடந்து 39 ஆண்டுகள் கடந்தும் குற்றவாளிகளுக்கு நீதி கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நெடுந்தீவு குமுதினி படுகொலையின் 39வது நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை நெடுந்தீவு மாவிலி துறைமுகத்தில் அமைந்துள்ள குமுதினி படுகொலை நினைவுத் தூவியில் நடைபெற்றது

நிகழ்வில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு நினைவுத் தூபிக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு நினைவுச் சுடர்கள் ஏற்றப்பட்டு மலர் வணக்கம் செலுத்தப்பட்டு அஞ்சலி நிகழ்வு உணர்வெளிச்சியுடன் நடைபெற்றது.

குமுதினி படகில் இருந்து கடலில் மலர்தூவி உயிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

உயிரிழந்தவர்களின் நினைவாக மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.

Recommended For You

About the Author: admin