“தமிழீழம் உருவாகியிருந்தால் அது இஸ்ரேலாக மாறியிருக்கும்”

தமிழீழம் ஏற்படுத்தப்பட்டிருந்தால் தென்னிலங்கை தற்போதைய பாலஸ்தீனமாக மாறியிருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீன பிரச்சினை தொடர்பான ஒத்திவைப்பு வேளை பிரேரணை நேற்றுச் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமினால் முன்வைக்கப்பட்டது.

குறித்த பிரேரணை மீதான விவாதத்தின் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“எமது நாட்டின் முப்படையினரும் இணைந்து பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவந்தனர். அவ்வாறு இல்லாவிட்டால் தெற்காசியாவின் இஸ்ரேலாக தமிழீழம் உருவாக்கப்பட்டிருக்கும்.

தமிழீழம் உருவாக்கப்பட்டிருந்தால் தென்னிலங்கை தற்போதைய பாலஸ்தீனமாக மாறியிருக்கும். தமிழீழத்திற்கு அப்பாற்பட்ட பிரதேசங்கள் அனைத்தும் இன்று காசா எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்திருக்கும்.

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உயிரை காப்பாற்ற அமெரிக்காவின் கடற்படை கப்பல் ஒன்று அப்போது இலங்கையை அண்மித்த சர்வதேச கடற்பரப்பிற்கு வந்திருந்ததை நாம் அறிவோம்.

அன்டன் பாலசிங்கம் பிரித்தானியாவில் இருந்து விடுதலைப் புலிகளுக்காக வேலைசெய்தார், அவரின் மனைவி விடுதலைப் புலிகளின் சீருடையுடன் பணியாற்றினார்.

ஆனாலும் அவர்களால் இலங்கையில் ஒரு இஸ்ரேலை உருவாக்க முடியாமல் போனது. பாலஸ்தீனத்தின் எஞ்சியுள்ள பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்து வருகின்றது.

சுதந்திர பாலஸ்தீனம் உருவாகுவதை தடுக்க அமெரிக்கா அதன் அதிகாரங்களை பிரயோகிக்கின்றது.

பாலஸ்தீன மக்கள் தற்போது அனுபவித்து வரும் துன்பங்களை நாங்கள் அனுபவித்திருக்க வேண்டிய ஒன்று.

அதனால் அவர்களின் துன்பம் மற்றும் துயரங்களை ஏனைய சர்வதேச நாடுகளை விட எங்களால் நன்கு உணர்ந்து கொள்ள முடிகின்றது.“ என தெரிவித்தார்.

Recommended For You

About the Author: admin