சவுக்கு சங்கருக்கு எதிராக மொத்தம் ஆறு வழக்கு

பிரபல யூடியூப்பர் சவுக்கு சங்கருக்கு எதிராக மேலும் மூவர் முறைப்பாடு செய்துள்ளனர்.

தமிழர் முன்னேற்றப்படை வீரலட்சுமி மற்றும் இரு பெண் பொலிஸ் அதிகாரிகள் செய்த முறைப்பாட்டை அடுத்து அவருக்கு எதிராக மேலும் பல வழக்குகளை பொலிஸார் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், அவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.

தமிழக காவல்துறை ஏடிஜிபி மற்றும் பெண் காவலர்கள் குறித்து சவுக்கு சங்கர் அண்மையில் பேசியிருந்தமை பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த நான்காம் திகதி தேனியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார். அத்துடன் அவரின் காரில் இருந்து கஞ்சாவும் கைப்பற்றப்பட்டிருந்தது.

தற்போது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கர் தீவிர விசாரணைக்கு உட்படுத்தபடுத்தப்பட்டுள்ளார்.

அவருக்கு எதிராக சைபர் கிரைம் வழக்கு, கஞ்சா வழக்கு இருக்கும் நிலையில் மேலும் மூன்று வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழக பெண் பொலிஸாரை இழிவாக பேசிய சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக முன்னேற்றப்படை நிறுவனர் வீரலட்சுமி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று முறைப்பாடு செய்துள்ளார்.

அத்துடன், திருச்சி மாநகரச் சேர்ந்த பெண் காவலர் ஒருவர் அளித்த முறைப்பாட்டின் பேரில் திருச்சி மாநகர சைபர் கிரைம் பொலிஸார் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதனிடையே, சேலம் உதவிப் பொலிஸ் ஆய்வாளர் கீதா அளித்த முறைப்பாட்டின் பேரிலும் சேலம் மாநகர பொலிஸார் சவுக்கு சங்கருக்கு எதிராக ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதேவேளை, கஞ்சா வழக்கு தொடர்பான விசாரணைக்காக மதுரையில் உள்ள போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்துக்கு சவுக்கு சங்கர் இன்று அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சவுக்கு சங்கர் இன்று காலை மதுரைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், மதியம் ஒரு மணிக்கு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin