பன்றி இறைச்சிக் கறி சாப்பிட்டு உயிரிழந்த இரண்டு சிறைக் கைதிகளின் பிரேதப் பரிசோதனை தொடர்பில் மரண விசாரணை அதிகாரியினால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, மேலதிக பரிசோதனைகளுக்காக இருவரது உடல் உறுப்புக்களையும் கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அனுப்பி வைக்குமாறு பணிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த இருவரும் பொரளை மற்றும் தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். ஐஸ் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டவர்கள்.
நேற்று முன்தினம் கைதி ஒருவரின் வீட்டில் தயாரிக்கப்பட்ட பன்றி இறைச்சியுடன் கூடிய உணவுப் பொதியை உறவினர்கள் கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
உணவுப் பொதியை உண்ட 15 கைதிகளில் மூன்று கைதிகளுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மூன்று பேரில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் தீவிர சிகிச்சையில் உள்ளார்.
உயிரிழந்த இரண்டு கைதிகளின் பிரேத பரிசோதனை நேற்று செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் குறித்த சம்பவம் தொடர்பில், சிறைச்சாலைத் திணைக்கள மட்டத்தில் விசாரணைகள் நடத்தப்படும் என சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.