யூரோ 2024 காற்பந்துக் கிண்ணத்தை இங்கிலாந்து அணி வெல்லக்கூடும் என்று மான்செஸ்டர் சிட்டி குழுவின் நிர்வாகி பெப் கார்டியோலா தெரிவித்துள்ளார்.
பல ஆண்டுகளாக முக்கியக் கிண்ணங்களை வெல்லத் தவறிய இங்கிலாந்து, இம்முறை சிறப்பாக விளையாடி கிண்ணத்தை வெல்லும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“மான்செஸ்டர் சிட்டி பலமுறை சாம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை வெல்லத் தவறியது ஆனால், கடந்த ஆண்டு பல தடைகளை வென்று சிட்டி முதல்முறையாக சாம்பியன்ஸ் லீக் கிண்ணத்தைக் கைப்பற்றியது. அதுபோல் இம்முறை இங்கிலாந்துக் காற்பந்து அணி வரலாறு படைக்கும்,” என்றார் கார்டியோலா.
தற்போதைய இங்கிலாந்து அணியில் முன்களத்தில் மட்டுமில்லாமல், அனைத்து இடங்களிலும் சிறப்பாக விளையாடக்கூடிய ஆட்டக்காரர்கள் உள்ளனர், அதனால் இங்கிலாந்து மற்ற அணிகளைவிட பலமாக உள்ளதாகவும் கார்டியோலா கூறினார்.
இந்நிலையில், யூரோ கிண்ணத்தில் விளையாடும் அணிகளில் இடம்பெறும் வீரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஓர் அணியில் 23 வீரர்கள் இருப்பார்கள், அது இப்போது 26ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதுகுறித்த தகவலை ஐரோப்பியக் காற்பந்துச் சங்கம் கடந்த வெள்ளிக்கிழமையன்று வெளியிட்டது.
யூரோ 2024 போட்டி ஜெர்மனியில் நடக்கிறது. போட்டி ஜூன் 14ஆம் திகதி தொடங்கி ஜூலை 14ஆம் திகதி நிறைவு பெறுகிறது.