ஒருவருடைய பூர்வ ஜென்ம புண்ணியமும், தோஷமும் அவரை பின்தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும் என்று கூறப்படுகிறது. பூர்வ ஜென்ம புண்ணியமாக இருக்கும் பொழுது அது நமக்கு நன்மையும் பாவமாக இருக்கும் பொழுது அதனால் பல கஷ்டங்களையும் நாம் அனுபவிக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும்.
இந்த பூர்வ ஜென்ம பாவத்தால்தான் பலரது வாழ்க்கையில் நிம்மதி என்ற பேச்சுக்கு இடமே இல்லாமல் போய் விடுகிறது.
இந்த பாவத்தால் வீட்டில் இருக்கக்கூடிய உறவுகளுக்கு இடையே மன கசப்புகள் ஏற்படுவதும் மன கஷ்டங்களும் சங்கடங்களும் ஏற்பட்டு அதை யாரிடமும் வெளிப்படையாக கூற முடியாத சூழ்நிலையும் உண்டாகிறது. அப்படிப்பட்டவர்கள் சிவபெருமானை எந்த முறையில் வழிபட்டால் மன கஷ்டமும் கசப்பும் நீங்கி நிம்மதியான வாழ்க்கையை பெற முடியும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்
மனம் ரீதியாக ஏற்படக்கூடிய அனைத்து விதமான பிரச்சினைகளுக்கு காரணமாக திகழ்பவர் சந்திர பகவானே. இவரை மனோகாரகன் என்றும் கூறுவோம். அப்படிப்பட்ட சந்திர பகவானை தன்னுடைய தலையின் மேல் வைத்து இருக்கும் சிவபெருமானை தான் நாம் சோமேஸ்வரர் என்று அழைக்கிறோம்.
ஒருவருக்கு சந்திர பகவானால் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் அவர் மனரீதியாக பாதிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. மன கஷ்டமும் மனக்கவலையும் நீங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் சிவபெருமானையும் வழிபட வேண்டும்.
சந்திர பகவானுக்குரிய தினமாக கருதப்படுவது திங்கட்கிழமை. திங்கட்கிழமை அன்று நாம் சிவபெருமானை வழிபடுவதன் மூலம் நம்முடைய மனக்கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது. வீட்டிலேயே எளிமையான முறையில் எப்படி சிவபெருமானை திங்கட்கிழமை அன்று வழிபடுவது என்று பார்ப்போம்.
இதற்கு நம் வீட்டில் இருக்கக்கூடிய சிவலிங்கம் ஒன்று போதும். பொதுவாக வீட்டில் பலரும் சிவலிங்கம் வைத்திருக்க மாட்டார்கள். ஆனால் ஸ்படிக லிங்கம் என்று கூறக்கூடிய மிகவும் சிறிய அளவில் இருக்கக்கூடிய சிவலிங்கத்தை நாம் வீட்டில் வைத்துக் கொள்ளலாம். அதில் எந்தவித தவறும் கிடையாது. சிவலிங்கம் இல்லாதவர்கள் இந்த மாதிரி விற்கக்கூடிய ஸ்படிக லிங்கத்தை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
திங்கட்கிழமை அன்று காலையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு பூஜை அறைக்கு வந்து நாம் வைத்திருக்கும் சிவலிங்கத்திற்கு ஏற்றார் போல் ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த கிண்ணத்தில் பாதி அளவிற்கு தண்ணீர் ஊற்றி அதற்குள் சிவலிங்கத்தை வைக்க வேண்டும். பிறகு சிவலிங்கத்திற்கு சந்தனம் குங்குமம் வைத்துவிட்டு வில்வத்தால் சிவபெருமானை அர்ச்சனை செய்ய வேண்டும்.
பிறகு வில்வாஷ்டகம் படிக்க வேண்டும். வில்வாஷ்டகம் தெரியாதவர்கள் ஒம் சோமேஸ்வரரே போற்றி என்னும் மந்திரத்தையும் கூறலாம். இப்படி கூறி அர்ச்சனை செய்துவிட்டு அந்த கிண்ணத்தை அப்படியே பூஜை அறையில் வைத்து விடுங்கள். அன்றைய பொழுது முழுவதும் சிவலிங்கம் அந்த தண்ணீருக்குள்ளேயே இருக்கட்டும். மறுநாள் காலையில் எழுந்து எப்போதும் போல் குளித்து முடித்துவிட்டு பூஜை அறைக்கு வந்து சிவலிங்கத்தை எடுத்து எப்பொழுதும் வைக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும்.
இந்த தீர்த்தத்தை எடுத்து வீடு முழுவதும் தெளிப்பதோடு மட்டுமல்லாமல் வீட்டு உறுப்பினர்கள் தலையிலும் தெளித்து விட வேண்டும். வில்வத்தை எடுத்து தனியாக வைத்துக் கொள்ளலாம். அடுத்த வாரம் பூஜை செய்வதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
இப்படி வாராவாரம் நம்முடைய மனக்கவலைகள் நீங்க வேண்டும் என்று சிவபெருமானை வழிபடுவதன் மூலம் விரைவில் நம்முடைய மன கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும். வீட்டில் இருக்கக்கூடிய சண்டை சச்சரவுகள் அனைத்தும் நீங்கி நிம்மதியான மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை வாழ முடியும்.
முழு நம்பிக்கையுடன் சிவபெருமானை இந்த முறையில் நாம் வழிபடுவதன் மூலம் நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய மன கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும்.