வடக்கின் பரம்பரை நில உரிமையாளர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல்

காணி அனுமதிப்பத்திரம் உள்ளிட்ட ஆவணங்கள் காணப்படும் காணி உரிமையாளர்களுக்கு அரச காணிகளின் பூரண உரிமையை வழங்குவதற்காக பெரும் விளம்பரத்துடன், ஜனாதிபதி “உறுமய” வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ள நிலையில், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வன்னியின் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களின் பத்திரப்பதிவு செய்யப்பட்ட பரம்பரை காணிகளை அரசாங்க நிறுவனம் ஒன்று கையகப்படுத்த முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தேசிய பூங்காவிற்குள் அத்துமீறி நுழைந்து தாவரங்களை சேதப்படுத்தியதாக வனஜீவராசிகள் திணைக்களத்தினால் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் பங்கேற்ற புதுக்குடியிருப்பு கரியல்வயல் பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர்,

”தாம் பரம்பரையாக பயிரிட்டு வந்த காணியை வனஜீவராசிகள் திணைக்களம் வர்த்தமானி அறிவித்தல் மூலம் கையகப்படுத்த முயற்சிப்பதோடு, தற்போது தமக்கு எதிராக நீதிமன்றத்தை நாடியுள்ளது.” எனத் தெரிவித்தார்.

“83 வரை நாங்கள் வயல் செய்தோம். அதன் பின்னர் அங்கு போக முடியாமல் போய்விட்டது. பின்னர் 2010 – 2012ற்கு இடையில் நாங்கள் மீள் குடியேறிய பின்னர் காணியை துப்பரவு செய்து விவசாயம் செய்து கொண்டு வருகின்றோம்.

2015இல் வனஜீவராசிகள் திணைக்களம் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக இந்த காணிகள் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு சொந்தமானது என அறிவித்தது. அதன் பின்னர் வழக்குத் தாக்கல் செய்தது.” என்றார்.

சுண்டிக்குளம் தேசிய பூங்காவிற்குள் அனுமதியின்றி பிரவேசித்தமை, பூங்காவிலுள்ள மரம், செடி, கொடிகளை வெட்டி அழித்தமை, பாதை உருவாக்கியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில், புதுக்குடியிருப்பு, கரியல்வயல் பிரதேச மக்கள் 130 பேருக்கு எதிராக வனஜீவராசிகள் திணைக்களம் வழக்கு தாக்கல் செய்தது.

இந்த வழக்கு, இரண்டாவது தடவையாக கடந்த மே 2ஆம் திகதி முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வடக்கில் ஆரம்பிக்கப்பட்ட யுத்தம் காரணமாக 80களின் முற்பகுதியில் தமது கிராம நிலங்களை விட்டு வெளியேறிய கரியல்வயல் கிராமத்தின் 130 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் யுத்தம் முடிவடைந்த பின்னர் தமது சொந்த கிராம நிலங்களுக்குத் திரும்பி, பரம்பரையாக பயிர்ச்செய்கைக்காகப் பயன்படுத்திய சுமார் 980 ஏக்கர் காணியில் சுமார் 610 ஏக்கர் நிலப்பரப்பை சுத்தப்படுத்தி விவசாய உற்பத்திகளை ஆரம்பித்ததாக தெரிவிக்கின்றனர்.

2015ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வனஜீவராசிகள் திணைக்களத்தினால் குறித்த காணி வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு சொந்தமானது என அறிவித்து.

அதனைத் தொடர்ந்து குறித்த கிராம மக்கள் மீது நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பிரதேச ஊடகவியலாளர்கள் மேலும் தெரிவித்தனர்.

இவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட வழக்கு 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 07ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதோடு, வழக்கு 2024ஆம் ஆண்டு மே மாதம் 2ஆம் திகதிக்கு நீதவான் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

வனஜீவராசிகள் திணைக்களத்தால் தாக்கல் செய்யப்பட்ட 130 பேரில் 100க்கும் மேற்பட்டோர் தங்கள் நிலத்திற்கான உறுதிப்பத்திரங்கள் உள்ளிட்ட ஆவணங்களை வைத்துள்ளதாக, பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் மே 2ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணி வி. எஸ். தனஞ்சயன் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் காணிகளை வலுக்கட்டாயமாக சுவீகரிப்பது தொடர்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இடையில் கலந்துரையாடலொன்று நடைபெற்றது.

இதன்போது, 1985ல் வனத்துறை உருவாக்கிய வரைபடத்திற்கு அமைய செயற்பட வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்ததாக, தமிழ் மக்கள் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன், 2023ஆம் ஆண்டு மே மாதம் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin