மே 13ஆம் திகதி மீண்டும் தமிழகம் – இலங்கை இடையே பயணிகள் படகு சேவை

நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையேயான பயணிகள் கப்பல் சேவை 40 ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த ஒக்டோபர் மாதம் மீண்டும் தொடங்கப்பட்டு சில நாட்களில் இடைநிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் எதிர்வரும் மே 13ஆம் திகதிமுதல் இந்த சேவை மீண்டும் தொடங்கப்பட உள்ளது.

கடந்த ஆண்டு ஒக்டோபர் 14ஆம் திகதி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையேயான சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஆறு மாத இடைவெளிக்குப் பின்னர் கப்பல் சேவை மீண்டும் தொடங்க உள்ளது. சென்னையைச் சேர்ந்த, IndSri Ferry Services Private Limited என்ற நிறுவனம் இந்த கப்பல் சேவையை இயக்க உள்ளது.

கப்பல் சேவை தினமும் மேற்கொள்ளப்படும். மே 13 முதல் நவம்பர் 15ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் மேற்கொள்ளப்படும் பயணங்களுக்கு எங்கள் இணையதளமான sailindsri.com டிக்கெட் விற்பனை திறந்திருக்கும் என IndSri Ferry Services Private Limited இன் நிர்வாக இயக்குநர் எஸ்.நிரஞ்சன் நந்தகோபன் தெரிவித்துள்ளார்.

பயணிகள் 60 கிலோ எடையுள்ள பொதிகளை கட்டணமின்றி எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். மேலும், திட்டமிடப்பட்ட பயணத்திற்கு 72 மணி நேரத்திற்கு முன்னதாக அவர்கள் பயணத் திகதியை மாற்ற அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த காலக்கட்டத்தில் ரத்து செய்தால் மட்டுமே முழுப் பணத்தையும் திரும்பப் பெற முடியும் என்றும் நிறுவனம் அறிவித்துள்ளது.

Recommended For You

About the Author: admin