வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நீக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து நிதியமைச்சர் என்ற ரீதியில் இறுதித் தீர்மானத்தை எடுப்பதற்கும், இறக்குமதி தொடர்பான அறிவிப்பை வெளியிடுவதற்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளன.
திறைசேரியின் அதிகாரிகள் அடங்கிய குழுவொன்றினால் இந்த பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளன.
இந்த பரிந்துரைகள் அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டால் மோட்டார் வாகன இறக்குமதி மீதான தடை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டுக்குள் வாகன இறக்குமதி தடை நீக்கப்படாவிட்டால், வருமான இலக்குகளை அடைய முடியாது, எனவே வாகன இறக்குமதியை சீராக்க வேண்டும் என்று குழு முடிவு செய்துள்ளதாக திறைசேரியின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அடுத்த ஆண்டுக்கான சர்வதேச நாணய நிதியத்தால் நிர்ணயிக்கப்பட்ட அதிகரித்த வருவாய் இலக்கை கருத்தில் கொண்டு குழு இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க டொலர் விலையை நீண்ட காலத்திற்கு கட்டுப்படுத்த முடியாது என்றும், எனவே தடையை நீக்குவது முக்கியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
எவ்வாறாயினும், இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விவரக்குறிப்பு, உற்பத்தி ஆண்டு உட்பட இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
சுற்றுலாத் துறைக்கு ரயில் பெட்டிகள், வேன்கள் உள்ளிட்ட 1,000 வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும் என முன்னதாக இந்த குழு பரிந்துரை செய்திருந்தது.
இதற்கு அமைச்சரவை அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது.
இதேவேளை, வாகனங்களின் இறக்குமதியானது வெளிநாட்டு கையிருப்பில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தாது என திறைசேரியின் மற்றுமொரு அதிகாரி கூறியுள்ளார்.
இலங்கையின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 431 மில்லியன் அமெரிக்க டொலர்களில் இருந்து 4,951 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.
திறைசேரி அதிகாரியின் கூற்றுப்படி, வாகன இறக்குமதி மீதான தடை நீக்கப்படுவதன் மூலம், இலங்கைக்கு ஆண்டுக்கு 800 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
எனினும், இதன்மூலம் 340 பில்லியன் ரூபாய் வரி வருவாய் ஈட்ட முடியும் எனவும், உள்ளூர் வருவாய் இலக்குகளை அதிகரிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.