இலங்கையில் 10 முதல் 15 வீதமான குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கு ஆஸ்துமா நோய்க்கான அறிகுறிகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவாச நிபுணர்கள் சங்கத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்துமா நோயாளர்கள் அதிகளவில் பதிவாகும் நாடுகளில் இலங்கை உள்ளடக்கப்பட்டிருப்பதாக சுவாச நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியர் நெரஞ்சன் திசாநாயக்க தெரிவித்தார்.
மேலும் “இலகுவான சிகிச்சைகளின் மூலம் ஆஸ்துமா நோயை ஆஸ்துமா நோயை முழுமையாக கட்டுப்படுத்தலாம். அவ்வாறு கட்டுப்படுத்தப்படாத பட்சத்தில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டி நேரிடும்.
நீண்ட காலத்திற்கு ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தாமல் விடுகின்ற பட்சத்தில், சுவாசக் கட்டமைப்பில் ஏற்படக்கூடிய கோளாறுகளினால் இறப்பு ஏற்படலாம்” என வைத்தியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆஸ்துமா என்றால் என்ன?
ஆஸ்துமா என்பது ஒரு நாள்பட்ட அழற்சி நோய் என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.நீண்டகால ஒவ்வாமையினால் நுரையீரல், மூச்சுக் குழாய்களில் ஏற்படும் பாதிப்பு ஆஸ்துமா என கூறப்படுகின்றது.
எவ்வாறாயினும் காச நோயைப் போன்று இது ஓர் தொற்று நோய் அல்ல.ஆஸ்துமா என்பது உட்புற, வெளிப்புற காரணிகளால் ஏற்படும் ஒவ்வாமையினால் உருவாகும் விளைவு.
இந்த நோய் நபரொருவரிடமிருந்து மற்றுமொரு நபருக்கு பரவாது.ஆனால் ஆஸ்துமா ஒரு நாள்பட்ட நோய். ஒருவருக்கு ஆஸ்துமா பாதிப்பு ஒருமுறை ஏற்பட்டால், வாழ்நாள் முழுவதும் அந்த பாதிப்பு இருக்கும்.
பரம்பரை, மரபணு வழியாக இந்த ஆஸ்துமா ஏற்படுகிறது. ஆஸ்துமா நோய்க்கான அறிகுறிகளாக மூச்சுத் திணறல்நெஞ்சு அடைத்தல் போன்றன காணப்படுகின்றது.
2019ஆம் ஆண்டு வரை உலகம் முழுவதும் 26.2 கோடி பேர் ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.