ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, கடந்த காலங்களில் நடந்தப்பட்ட முக்கிய தேர்தல்களைப் போன்று இம்முறையும் அடிப்படை அரசியல் முன்னேற்றங்களை மதிப்பிடுவதில் சர்வதேச சக்திகள் தமது முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளன.
மேதின நிகழ்வுகளின் பின்னர் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்திற்கான அடித்தளமாக தமது அரசியல் பலத்தை காட்ட முயற்சிக்கும் நிலையில், அரசியல் சூழல் சூடுபிடிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இலங்கையுடன் இருதரப்பு உறவுகளை கொண்டுள்ள சர்வதேச நாடுகள் முக்கிய தேர்தல்களின் போது அரசியல் முன்னேற்றங்கள் குறித்து அவதானிப்பது இயல்பான விடயமாகும்.
சாத்தியமான விளைவுகள்
இருப்பினும், அமெரிக்கா, இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட ஏனைய மேற்கசாத்த்திய நாடுகள் குறிப்பாக தேர்தல்களின் சாத்தியமான விளைவுகளில் ஆர்வம் காட்டிவருகின்றன.
இவை, தமது நாட்டில் மூலோபாய மற்றும் போட்டி நலன்களைக் கொண்டுள்ளதனை அவதானிக்க முடிகிறது.
இந்த பின்னணியிலே, தற்போதைய அரசியல் சூழ்நிலையை மதிப்பிடுவதற்காக சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (CPC) பிரதிநிதிகள் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச விவகாரத்துறையின் பிரதி அமைச்சர் சன் ஹையான் அடங்கிய குழுவினர் இலங்கை அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
முன்னதாக, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட குழுவினரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.
இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் உண்மை நிலைப்பாட்டினை அறிவதற்கு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகள் ஆர்வம் காட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.
கருத்துப் பரிமாற்றம்
இதனைத் தொடர்ந்து, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்டவர்களை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகள் சந்தித்து தற்போதைய அரசியல் நிலை குறித்து கருத்துகளை பரிமாறிக்கொண்டுள்ளனர்.
இதேபோன்று இந்தியாவும் இலங்கையின் அரசியல் நிலவரம் குறித்து அதிக கவனம் செலுத்தி வருகிறது.
இதற்கமையவே, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவை அழைத்து இந்தியா பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது.
இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் சர்வதேச சக்திகளின் உச்சக்கட்ட விழிப்புணர்வானது, நாட்டின் புவிசார் அரசியல் முக்கியத்துவத்தையும் பிராந்திய இயக்கவியலில் அதன் சாத்தியமான தாக்கத்தையும் பிரதிபலிப்பதாக அமைகிறது.