எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றிபெறுவது உறுதியாகியுள்ள நிலையில் அதற்கு அஞ்சியுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை விரும்புகிறார் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார் கேள்வியெழுப்பியுள்ளார்.
ஜே.வி.பியின் வெற்றி மூலம் நாடு மீண்டும் வீழ்ச்சியடையும். நாட்டை ஆள இன்னொரு சந்தர்ப்பம் கிடைக்கும் என ஜனாதிபதி நினைப்பதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார் மரிக்கார்.
“ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுவிடும் என்று ஜனாதிபதி பயப்படுகிறார். அதனால் தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை அவர் விரும்புகிறார். ஏனெனில் ஜே.வி.பி வெற்றி பெற்றால் கோட்டாபய ராஜபக்சவின் இரண்டாவது அரசாங்கமே மீண்டும் அமையும்
அப்போது மீண்டும் இந்த நாட்டின் பொருளாதார அமைப்பு முற்றிலும் சிதைந்து விடும். அதன்மூலம் இன்னொரு வாய்ப்பு கிடைக்குமா என ரணில் எதிர்பார்க்கிறார்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் நேற்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய மரிக்கார் மேலும் கூறியதாவது,
“கடந்த வருடம் கொழும்பு மாநகர சபைக்கு முன்பாக மே தின பேரணியை நடாத்துவதற்கு ஜே.வி.பிக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்ட போதிலும் இம்முறை ஐக்கிய மக்கள் சக்தி விடுத்த கோரிக்கைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்திக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான ஒப்பந்தத்தில் இது நடக்கிறதா? நீங்கள் ஏன் ஐக்கிய மக்கள் சக்தியின் படைக்கு பயப்படுகிறீர்கள்?” எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.