இஸ்ரேலிய இராணுவ உளவு இயக்ககத் தலைவர் பதவியிலிருந்து மேஜர் ஜெனரல் அஹாரன் ஹாலிவா இராஜிநாமா செய்துள்ளார்.
இஸ்ரேலிய எல்லைக்குள் நுழைந்து கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்தி 1200 க்கும் மேற்பட்டோரைக் கொன்றதுடன், 250 க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களைப் பிணைக் கைதிகளாகவும் கடத்திச் சென்றுவிட்டனர்.
இஸ்ரேலிய வரலாற்றில் மிக மோசமானதாகக் கருதப்படும் இந்தத் தாக்குதலைப் பற்றி உளவுத்துறை முன்னதாகவே அறிந்துகொள்ளவும் தகவலளிக்கவும் தவறிவிட்டதாக மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில்தான் ஹாலிவாவின் இராஜிநாமா பற்றி இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, ஹமாஸுக்கு எதிராக காஸா பகுதியின் மீது இஸ்ரேல் தொடங்கிய போர், தற்போது ஏழாவது மாதமாகத் தொடர்ந்துகொண்டிருக்கிறது.
தலைமைப் பண்புக்குப் பொறுப்பேற்றுத் தனது சேவையை முடித்துக் கொள்ளுமாறு அஹாரன் ஹாலிவா கேட்டுக்கொள்ளப்பட்டதாக அறிக்கையொன்றில் இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் தாக்குதல் நடந்தவுடனேயே இதுபற்றி முன்னதாகவே உளவறிந்து எச்சரிக்கத் தவறியதற்காகப் பொறுப்பேற்பதாக வெளிப்படையாக ஹாலிவா அறிவித்திருந்தார். ஹாலிவாவின் விலகலை ஏற்றுக் கொண்டு நன்றி தெரிவிப்பதாகவும் இஸ்ரேலிய இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
இந்தத் தோல்விக்குப் பொறுப்பேற்று மேஜர் ஜெனரல் ஹாலிவாவும் பிற இராணுவ, பாதுகாப்பு உயர் அலுவலர்களும் பதவி விலகுவார்கள் என்பது பரவலாக எதிர்பார்க்கப்பட்டதே.
எனினும், இராஜிநாமா அறிவிப்பு வெளியாகியுள்ள நேரமோ தற்போதைய நிலைமை எதையும் பிரதிபலிப்பதாக இல்லை. இன்னமும் காஸாவில் ஹமாஸுக்கு எதிரான போர் தொடர்ந்துகொண்டிருக்கிறது.
வடக்கே லெபனான் தீவிரவாதக் குழுவான ஹெஸ்புல்லாவுடன் சண்டை நடந்துகொண்டிருக்கிறது. ஈரானுடனும் பரஸ்பரத் தாக்குதல்களைத் தொடர்ந்து பதற்றம் அதிகரித்திருக்கிறது.
தாக்குதலைத் தடுக்கத் தவறியதாக ஹாலிவா போன்றோர் பொறுப்பேற்றுக் கொண்டபோதிலும் மற்றவர்கள், குறிப்பாக, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு, எத்தகைய கடினமான கேள்விகளுக்கும் பதிலளிக்கத் தயார், ஆனால், இந்தத் தோல்விக்கு எவ்வகையிலும் தாங்கள் பொறுப்பல்ல என்று தெரிவித்துவருகிறார்