மட்டக்களப்பு – வாகரையில் அபிவிருத்தி எனும் போர்வையில் திட்டமிடப்படும் இறால் வளர்ப்பு திட்டம் மற்றும் இல்மனைட் தொழிற்சாலை அமையப் பெறுவதை முற்றாக தடை செய்யக்கோரிய கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகத்திற்கு முன்பாக திங்கட்கிழமை (22) இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
“இல்மனைட் அகழ்வை முற்றாக தடை செய், சூழலை பாதிக்கும் இறால் வளர்ப்பு திட்டம் நமக்கு வேண்டாம், அகழாதே,அகழாதே,எம் மண்ணை அகழாதே, வெளியேறு வெளியேறு கொள்ளையர்களே வெளியேறு, இயற்கை வளங்களை அழிக்கும் செயல் திட்டங்கள் எமக்கு வேண்டாம்” உள்ளிட்ட பல்வேறு பதாதைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஆகியோர்கள் சம்பவ இடத்திற்கு வருகை தரவேண்டும் எனவும் தமக்கு நீதி எனவும் வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலாளர் எந்திரி ஜீ. அருணன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது புதிதாக எதுவிதமான அனுமதியும் வழங்கவில்லை என்றும் இனியும் வழங்கப் போவதில்லை என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
மேலும் இல்மனைட் அல்செமி கெவி மெட்டல் கம்பனியால் தனக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் அருணன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ,போராட்டத்தில் ஈடுபட்டோர் மற்றும் பிரதேச சிவில் அமைப்புக்களை சந்தித்து அரசாங்க அதிபர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நேரடி கலந்துரையாடலை மேற்கொள்ளவுள்ளதாக அரசாங்க அதிபர் தரப்பில் பதிலளிக்கப்பட்டது.
கிழக்கு மாகாண அளுநர் செந்தில் தொண்டமான் வெளிநாட்டிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் சமூகமளிக்க முடியாமற்போனதாக அளுநர் தரப்பில் பதில் பதிலளிக்கப்பட்டது.இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டோர் கலைந்து சென்றுள்ளனர்.