ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் நடாத்தப்படும் என்ற தகவல் வெளியானதைத் தொடர்ந்து, அரசியல் கட்சிகளின் தலைவர்கள் குறைந்தபட்சம் 50 வீதத்துடன் மேலதிகமாக ஒரு வாக்குகளையேனும் பெற்று, ஜனாதிபதி ஆசனத்தில் அமருவதற்கான புதிய வியூகங்களை வகுக்க ஆரம்பித்துள்ளதாக டெயிலி மிரர் ஆங்கில செய்தி இணையத் தளம் விமர்சித்துள்ளது.
முன்னதாக அறிவிக்கப்பட்டதற்கு அமைய, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புதிய சின்னத்தில் போட்டியிடும் தேசிய வேட்பாளராக தன்னை முன்னிலைப்படுத்தி வருகின்றார்.
அத்துடன், தமக்கு ஆதரவளிக்குமாறு அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுத்துள்ளமையையும் அவதானிக்க முடிகிறது என்ற தொனியிலும் டெயிலி மிரர் சுட்டிக்காட்டியுள்ளது.
பகிரங்கமான விடயம்
யானைச் சின்னத்தில் போட்டியிட்டால் தான் வெற்றிபெற வாய்ப்பில்லை என்பதை நன்கு அறிந்த ரணில் விக்ரமசிங்க 50 வீத வாக்குத் தளத்தை இலக்காகக் கொண்டு தன்னை ஆதரிக்க எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேரம் பேசுகி வருகிறார் என்பது பகிரங்கமாகத் தெரிகிறது.
தற்போதைய நிலையில், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சில முக்கிய உறுப்பினர்கள் ஏற்கனவே ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளனர்.
ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு வெளியானதும், ரணிலுக்கு ஆதரவு வழங்கக்கூடிய முறையில் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் சில முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் ரணில் பேரம் பேசுகிறார்.
இந்த அனைத்து விவாதங்கள் மற்றும் பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இதுவரை 50 வீத வாக்குத் தளத்தை உறுதிசெய்துகொள்ள சூழல் உருவாகிவிட்டதா என்பது இன்னமும் சந்தேகமாகவே உள்ளது.
இந்த நிலையில், வெற்றியை இலக்காகக் கொண்டு ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லது அரசியல் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் நிலைமையே பெரும்பாலும் காணப்படுகிறது.
ராஜபக்ச தரப்பின் உத்தி
இதனிடையே, பிளவடைந்துள்ள ராஜபக்ச தலைமையிலான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிய உறுப்பினர்கள் சிலர் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கும் அதேநேரம், ஏனையவர்கள் தமது சார்பில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு பிரயத்தனம் காட்டி வருகின்றனர் என்பதும் மற்றுமொரு தகவல்.
இதன்படி, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவின் வழிகாட்டலின் கீழ் நிச்சயமாக ஒரு வேட்பாளர் களமிறக்கப்படும் சாத்தியம் காணப்படுகிறது.
இதனையே, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தமது வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் எனவும், மொட்டுதான் சின்னமாக இருக்குமெனவும் நாமல் சுட்டிக்காட்டுகிறார்.
எவ்வாறாயினும், கட்சி யாரை களமிறக்குவது என்பது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை எனவும், ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட பலரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு வருவதாகவும் நாமல் மற்றுத் தகவல் ஒன்றையும் கசிய விட்டுள்ளார்.
சஜித்தின் நிலைமை
இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தமது கட்சியின் வேட்பாளர் ஒருவரை நிறுத்தினாலும், 50 வீத வாக்குகள் உறுதிசெய்யப்படுமா என்பது கேளவிக்குறியே.
ஜனாதிபதி என்ற நிறைவேற்று அதிகாரத்தை வெற்றிகொள்வதற்குத் தீவிர பிரசாரத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
இப் பின்புலத்தில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிடவுள்ள சஜித் பிரேமதாசவின் நிலையும் இவ்வாறே காணப்படுகின்றது.
சஜித் கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர் ஏற்கனவே ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்திவரும் நிலையில், அவர்கள் ரணிலுக்கு ஆதரவளித்தால் வாக்குகள் மேலும் பிரிந்துவிடும்.
ஆகவே, 50 வீத வாக்குத் தளத்தை பாதுகாப்பதற்கு கட்சியின் அனைத்து உறுப்பினர்களையும் தம்வசப்படுத்த வேண்டிய கட்டாயச் சூழல் சஜித் பிரேமதாசவுக்கு ஏற்பட்டுள்ளது.
இதேநேரம், ஜேவிபியின் அரசியல் கூட்டணி என அழைக்கப்படும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இலங்கைத்தீவு முழுவதிலும் பரவிவரும் தமக்கான ஆதரவை சாதகமாக பயன்படுத்த முனைகின்றார்.
வெசாக்கின் பின்னரான அறிவிப்பு?
இலங்கைத்தீவு முழுவதையும் மையப்படுத்தி மக்கள் சந்திப்புகளை நடத்தித் தமது தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்துள்ள போதிலும் 50 வீத வாக்குத்தளம் கிடைக்குமா என்பதைத் தற்போதைக்கு அனுமானிக்க முடியாது.
இப் பின்னணியில் வெசாக் விடுமுறையின் பின்னர் ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் அதேவேளை, வேறு சில முக்கிய சலுகை – நிவாரண அறிவிப்புகளும் வெளிவர வாய்ப்புள்ளமை பட்டவர்த்தனம்.
சலுகை – நிவாரண அரசியல் விஞ்சிக் காணப்படும் காலமிது.