புலிகளால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சகோதரன்
நினைவிடத்தில் உணர்வஞ்சலி செலுத்தினார் அமைச்சர் டக்ளஸ்
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி கல்வயல் பகுதிக்கு இன்றையதினம் காலை சென்றிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது சகோதரரான பிறேமானந்தா 1987 ஆம் ஆண்டு புலிகளால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நினைவிடத்தில் சில நிமிடங்கள் மனம் ததும்ப தனது உணர்வஞ்சலிகளை செலுத்தினார்.
முன்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சகோதரரான பிறேமானந்தா 1987 ஆம் ஆண்டு ஜீலை மாதம் புலிகள் அமைப்பின் முக்கியஸ்தரான திலீபன் மற்றும் கிட்டு ஆகியோரின் ஆலோசனையில் ஆஞ்சனேயர் (இளம்பருதி), குணா, பாப்பா, கில்மன், தக்காளி மற்றும் தமிழ்செல்வன் (தினேஸ்) பேக்காய். மணியம் உள்ளிட்டவர்களால் கல்வயல் கிராம்பூவில் வயல் பகுதியில் கடத்தப்பட்டு கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்தியாவில் தங்கியிருந்த டக்ளஸ் தேவானந்தாவின் சகோதரரும் ஈ.பி.ஆர். எல்.எவ். அமைப்பின் அன்றைய அரசியல் செயற்பாடுகளின் முன்னணி முக்கியஸ்தருமான பிறேம் எனப்படும் பிறேமானந்தா அரசியல் செயற்பாடுகளை மீண்டும் முன்னெடுப்பதற்காக படகின் மூலம் யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்திருந்தார்.
யாழ்ப்பாணம் வருகை தந்திருந்த பிறேமானந்தா யாழ்ப்பாணத்தில் தனது கட்சியின் உறுப்பினர்களை சந்தித்த பின்னர் தனது நெருங்கிய மற்றொரு தோழரான இப்ராகிம் என்பவருடன் சாவகச்சேரிக்கு சென்று அங்குள்ள தோழர்களை சந்தித்து அவர்களது நலன்கள் தொடர்பில் பார்வையிட்டபின் கல்வயல் பகுதிக்கு கல்வயல் அக்காவை சந்திப்பதற்காக இப்ராகிமுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்
இந்நிலையிலேயே புலிகள் அமைப்பின் முக்கியஸ்தரான திலீபன் மற்றும் கிட்டு ஆகியோரின் ஏற்பாட்டில் புலிகள் அமைப்பின் தென்மராட்சி செயற்பாட்டு உறுப்பினர்களான ஆஞ்சனேயர், குணா, பாப்பா, தக்காளி மற்றும் தமிழ்செல்வன் உள்ளிட்டவர்களால் பிறேமானந்தா மற்றும் இப்ராகிம் ஆகிய இருவரும் கடத்தப்பட்டு கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
குறித்த பகுதிக்கு இன்று சென்றிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, புலிகளால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட தனது சகோதரனின் நினைவிடத்தில் சில நிமிடங்கள் மனம் ததும்ப தனது உணர்வஞ்சலிகளை செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.