தமிழர் தாயகத்தை சிதைத்து, தமிழரின் இருப்பை அழிக்கும் நோக்கில் இனக்கலவரங்களை ஏற்படுத்தி இனச்சுத்திகரிப்பு செயற்பாட்டில் கோர தாண்டவமாடிய ஜே.வி.பினருடன் தமிழ் மக்களின் பிரதிநிதி எனக் கூறிக்கொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கைகோர்க்கிறாரா என பாமரரும், புத்தி ஜீவிகளும் தற்போது கேள்வியெழுப்பி வருகின்றனர்.
ஐக்கிய தேசியக் கட்சி உட்பட பல கட்சிகளின் கூட்டங்களில் அவர்களது அழைப்பின் பேரில் கலந்துகொண்டிருந்த, எம்.ஏ.சுமந்திரன் ஜே.வி.பியின் அரசியல் கூட்டணியான தேசிய மக்கள் சக்தியின் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளமை, சர்வதேச ரீதியில் அவதானம் செலுத்தும் விடயமாக மாறியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அக்கூட்டணியின் வேட்பாளருமான அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் இடம்பெற்ற மாநாட்டில் தமிழ் மக்களின் பிரதிநிதியான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் முதல் வரிசையில் அமர்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
இதனை அவதானித்த தமிழத் தேசியவாதிகள், அரசியல் ஆய்வாளர்கள் என பலரும் பல கருத்துக்களை வெளியிட்டு வரும் அதேவேளை, தத்தமது சந்தேகங்களையும் பகிரங்கமாகத் தெரிவித்து வருகின்றனர்.
ஏனெனில், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஊடாக அரசியலுக்குள் பிரவேசித்து, தமிழரசு கட்சிக்குள்ளும் நுழைந்து, கட்சிக்குள்ளேயே பல்வேறு அரசியல் காய்நகர்த்தல்களையும் சுமந்திரன் முன்னெடுத்தும் வருகின்றார்.
அதற்கு உதாரணமாக அண்மையில் பெரும் பேசுபொருளாகவும் பலரின் பரிகாசத்திற்கும் உள்ளான நீதிமன்ற வழக்கையே எடுத்துக் கூறலாம்.
தமிழரசுக் கட்சிக்கு எதிராக தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் இருவர் வழக்குத்தாக்கல் செய்து தமிழரசுக் கட்சியின் செயற்பாடுகள் முடக்கப்பட்டு கேலிக்குள்ளான சம்பவத்தின் பின்னணியில் சுமந்திரனே இருந்ததாக அந்தக் கட்சி உறுப்பினர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
இது தொடர்பில் சுமந்திரனும் உறுதியான வகையில் பதிலளிக்காது பல முரண்பட்ட கருத்துக்களையே வெளிப்படுத்தியுள்ளார்.
ஒரு சமயம் கட்சி மீது வழக்குத் தொடுக்கப்பட்டது தவறு எனவும், இன்னுமொரு சமயம் வழக்கு தொடர்ந்தது சரி தான் எனவும் முன்னுக்கு பின் முரணான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமன்றி அவர் மீது பல குற்றச்சாட்டுக்கள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டே வருகின்றன. நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் அரசாங்கத்துடனும், ரணில் விக்ரமசிங்கவுடனும் நெருங்கமாக செயல்பட்ட சுமந்திரன், ரணில் விக்ரமசிங்கவின் நெருங்கிய நண்பராகவும் உள்ளார்.
தமிழசுக் கட்சியின் தலைமைத்துவத்தை கைப்பற்றும் இவரது வியூகம் தோல்சியடைந்த நிலையில், நீதிமன்ற வழக்கின் ஊடாக இந்தச் செயல்பாட்டை இடைநிறுத்தியமை தமிழர்கள் மத்தியில் பெரும் கொதிநிலையை ஏற்படுத்தியிருந்தது.
இவ்வாறான நிலையிலேயே யாழில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் சுமந்திரன் கலந்து கொண்டிருந்தமை பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.