சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி (சமகி ஜன பலவேகய) மற்றும் அந்த கட்சியுடன் இணைந்து செயற்படும் கட்சிகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான புதிய கூட்டணியின் முதல் கட்ட நகர்வாக இந்த விடயம் பார்க்கப்படுகிறது.
எதிர்வரும் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களை இலக்கு வைத்து இந்த கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பேராசிரியர் பீரிஸ், டிலான் பெரேரா, நாலக கொடகேவா, கே.பி.எஸ்.குமாரசிறி, உபுல் கலப்பத்தி மற்றும் வசந்த யாப்பா பண்டார ஆகியோர் இணைந்துள்ளனர்.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பான பேச்சுவார்த்தை பல மாதங்களாக இடம்பெற்று வந்த நிலையில் ஒப்பந்தம் இன்று (05) வெள்ளிக்கிழமை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
அதேவேளை, டலஸ் அழகப்பெரும உள்ளிட்ட நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இக் கூட்டணியில் இன்று இணைந்துகொள்ள மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கூட்டணி தொடர்பில் தமக்கு அறிவிக்கப்படவில்லையென டலஸ் அழகப்பெரும தெரிவித்திருக்கிறார்.
சஜித் தலைமையிலான மேற்படி கட்சியில் மலையகத் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் ஏற்கனவே இணைந்து செயற்பட்டு வருகின்றமை குறிப்படத்தக்கது.