தென்கொரியப் பிரதமர் ஹான் டக் சூவுக்கும் (Han Duck Soo) இலங்கைப் பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.
இந்த சந்திப்பு சியோலில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் போது, இலங்கைக்கு தென்கொரியா அளித்துவரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்த, பிரதமர் தினேஷ் குணவர்த்தன இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேலும் வலுப்படுத்தப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, பாரிய நிதி நெருக்கடியில் இருந்து மீண்டுள்ள இலங்கை, பரிஸ் சமூகத்தில் உறுப்பினரான நாட்டின் வெற்றிக்காக எப்போதும் தமது நாடு துணை நிற்கும் எனவும் தென்கொரிய பிரதமர் குறிப்பிட்டார்.
மேலும், இலங்கைக்கு பல புதிய தொழில் வாய்ப்புகளுக்கான வாயில்கள் திறக்கப்படும் எனவும், தென்கொரிய மக்கள் இலங்கைக்கு விஜயம் செய்ய விரும்புவதாகவும், அவர்களுக்கு அதற்கான வாய்ப்புகளை வழங்கவுள்ளதாகவும், இலங்கையின் எதிர்கால செயற்பாடுகளில் தென் கொரியா எப்போதும் துணைநிற்கும் எனவும் தெரிவித்தார்.
இதேவேளை தமது நாட்டில் விவசாயம், கட்டுமானம் மற்றும் பிற தொழில்களுக்கு வேலைகளை வழங்கும் தொழிலாளர்களின் சுகாதார சேவைகள் மற்றும் தொழில்முறை சேவைகளுக்கு புதிய வேலைகளை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளையும் குறிப்பிட்டார்.
இந்த சந்திப்பில், கொரிய அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள், இராஜாங்க அமைச்சர்களான பியால் நிஷாந்த, அனூப பஸ்குவேல், பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, தென்கொரியாவுக்கான இலங்கைத் தூதுவர் சாவித்ரி பானபொக்க, பிரதமரின் ஊடகச் செயலாளர் லியனகே ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.