கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகளை மீண்டும் முன்னெடுப்பதற்காக நிபுணர்களால் கோரப்பட்ட நிதிக்கு நீதி அமைச்சு அனுமதி வழங்காத நிலையில் பணிகள் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இதுவரை சுமார் 40 எலும்புக்கூடுகள் அகழ்வின் போது கண்டெடுக்கப்பட்ட நிலையில் தொடர்ந்தும் அகழ்வு பணிகளை முன்னெடுப்பதற்கு 1.3 மில்லியன் ரூபா நிதி தேவைப்படுவதாக அகழ்வுப் பணிகளுக்குப் பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நிதி மதிப்பீட்டை மீள்பரிசீலனை செய்யுமாறு நீதியமைச்சு கோரிக்கை விடுத்துள்ளதாக மாவட்ட பிரதான பொது கணக்காளர் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரம் தொடர்பான வழக்கு முல்லைத்தீவு நீதவான் தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் நேற்று (04) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதையடுத்து இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிப்படுகின்றது.
“ வீதியில் மனித எலும்புக்கூடுகள் காணப்பட்ட நிலையில் ஸ்கேன் பரிசோதனை மூலம் அகழ்வு பணிகளை முன்னெடுப்பதற்குநிதி ஒதுக்கீடுகளுக்காக நீதிமன்றம் காத்திருந்தது.
இதற்கமைய, முன்னதாகவே கொடுக்கப்பட்ட நிதித் தொகையில் நீதி அமைச்சுக்கு ஒதுக்கப்படும் மொத்த நிதியில் 07 வீதம் இதற்கென செலவிட வேண்டியுள்ளமையால் மீள் பரிசீலனை செய்து கணக்கறிக்கையை சமர்ப்பிக்குமாறு அமைச்சு கோரியுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட செயலக பிரதம கணக்காளரால் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன் பின்னரே அமைச்சினால் இதற்கான நிதி ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
தொண்ணூறுகளில் புதைக்கப்பட்ட விடுதலைப்புலிகள்
இதேவேளை, நிதியுதவி வழங்குவதாக உறுதியளித்த காணாமற்போனோர் தொடர்பிலான அலுவலகத்தின் பிரதிநிதிகளும் இன்று நீதிமன்றில் முன்னிலையாகியிருந்ததாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகளுக்கான மேலதிக தடயவியல் பரிசோதனைகளுக்கு பணம் கிடைக்கவில்லை என, முல்லைத்தீவு சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ தெரிவித்தார்.
அகழ்வு நடவடிக்கையின் போது கண்டெடுக்கப்பட்ட சில எலும்புக்கூடுகள், தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் புதைக்கப்பட்ட விடுதலைப் புலிகளுடையது என தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ அண்மையில் நீதிமன்றில் தெரிவித்திருந்தார்.
சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சியின் போது 1994 ஆம் ஆண்டு முதல் 1996 காலப்பகுதியில் குறித்த சடலங்கள் புதைக்கப்பட்டதாக, முல்லைத்தீவு நீதிமன்றில் கையளிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள காலப்பகுதியில் பாரிய புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதி, அப்போதைய பிரிகேடியர் ஜானக பெரேராவின் இலங்கை இராணுவத்தின் ஆறாவது ‘வெலிஒய’ படையணியின் கீழ் இருந்ததாக இலங்கை ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
“மேற்கூறிய காலப்பகுதியில், புதைகுழி அமைந்துள்ள இடத்தை அண்மித்துள்ள கொக்குத்தொடுவாய் இராணுவ முகாம் லெப்டினன்ட் கேணல் ரோஹித விக்ரமதிலகவின் கீழ் அமையப்பெற்றிருந்து நான்காவது கெமுனு ஹேவா படைப்பிரிவின் கட்டளையின் கீழ் இருந்தது.
1995 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் 1996 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை லெப்டினன்ட் கேணல் விக்கிரமதிலக அதற்கு கட்டளைத் தளபதியாக செயல்பட்டார்” என இலங்கை ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் ஊடக அறிக்கை குறிப்பிடுகின்றது.
அகழ்விற்கான ஆரம்பம்
முல்லைத்தீவு சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவாவின் பங்கேற்புடன் 2023 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை முன்னெடக்கப்பட்ட அகழ்வு நடவடிக்கைகளின் போது 40 எலும்புக்கூடுகளும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகளுடையது எனவும், அந்த உடல்கள் இரகசியமாக புதைக்கப்பட்டுள்ளதாகவும் தீர்மானிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழப்பதற்கு முன்னர் துப்பாக்கி பிரயோகத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்ததாகவும் பேராசிரியர் ராஜ் சோமதேவவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
2023 ஆம் ஆண்டு ஜூன் மாத இறுதியில், கொக்குத்தொடுவாய் மகாவித்தியாலயத்திலிருந்து கொக்கிளாய் நோக்கி சுமார் 200 மீற்றர் தொலைவில், நீர் குழாய்களை அமைப்பதற்காக நீர் வழங்கல் திணைக்கள ஊழியர்களால் நிலம் தோண்டப்பட்டதையடுத்து தற்செயலாக மனித உடல் பாகங்கள் மற்றும் ஆடைத் துணிகள் கண்டெடுக்கப்பட்டன.