அடுத்தடுத்து நெருக்கடியை சந்திக்கும் மைத்திரி

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ந்தும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளராக செயற்படுகின்றமை கட்சியின் யாப்பை மீறும் செயல் என சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை வகிப்பதற்கு மைத்திரிபால சிறிசேன தகுதியற்றவர் என கூறி பதவி நீக்கலுக்கான நிரந்தர தடையுத்தரவை கோரி முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவினால் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க விடுத்த வேண்டுகோளை பரிசீலித்த நீதிமன்றம் ஏப்ரல் 18 ஆம் திகதி வரை அமுலாகும் வகையில் குறித்த தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.

கட்சியின் யாப்பிற்கமைய கூட்டணியில் போட்டியிட்டு ஜனாதிபதி பதவி வகித்தபோது ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளராக பதவி வகிப்பதற்கு மைத்திரிபால சிறிசேனவிற்கு இயலுமை காணப்பட்டதாகவும் பதவி முடிவுக்கு வந்ததும் அவர் ஆலோசகர் பதவிக்கு தெரிவானதாக மனுதாரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டினர்.

இந்நிலையில் மைத்திரிபால சிறிசேன, சுதந்திரக் கட்சியின் ஆலோசகராக பதவி வகித்துக்கொண்டே தவிசாளராக பதவி வகிக்கின்றமை கட்சியின் யாப்பிற்கு முரணானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட வழக்கு விசாரணையின் போது மக்களது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதென நீதிமன்றம் தீர்ப்பளித்ததையும் மேற்கோள்காட்டி, அவர் தவிசாளர் பதவியை வகிப்பதற்கான தகுதியை இழந்துள்ளார் என சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

மைத்திரிபால சிறிசேன கட்சியில் தலைமை பொறுப்பை ஏற்கும் போது, 140 ஆக காணப்பட்ட கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை தற்போது 02 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உபதவிசாளர் மஹிந்த அமரவீர நிலைமை குறித்து கவலை வெளியிட்டார்.

மேலும் கட்சியின் இவ்வாறான நிலைமையை கருத்திற்கொண்டே சந்திரிக்கா நீதிமன்றத்தை நாடியதாக அவர் மேலும் தெரிவித்தார்

Recommended For You

About the Author: admin