கார்த்திகைப் பூ: மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பாணை

யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் இல்ல அலங்காரம் தொடர்பாக அதிபர் ஆசிரியர்கள், மாணவர்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விளக்கமளிக்குமாறு தெல்லிப்பழை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பாணை விடுத்துள்ளது.

யூனியன் கல்லூரியின் இல்ல மெய்வல்லுனர் போட்டி கடந்த சனிக்கிழமை (30) நடைபெற்றது.

இதன்போது, கார்த்திகைப் பூ வடிவிலும், போர் டாங்கி வடிவிலும், இல்ல அலங்கரிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அவை தொடர்பிலான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்தன.

இது தொடர்பில் விளையாட்டு போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் பொலிஸார், இராணுவ புலனாய்வாளர்கள் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினர் பாடசாலைக்கு நேரில் சென்று இல்லங்களை பார்வையிட்டு, புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை எடுத்தனர்.

அத்துடன் ஞாயிற்றுக்கிழமை பாடசாலை நிர்வாகத்தினை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வாக்கு மூலங்களை பெற்ற பின்னர் அவர்களை விடுவித்து இருந்தனர்.

மேலும், சட்டத்தை மீறி பாடசாலைக்குள் நுழைந்த பொலிஸாரின் செயலுக்காக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் மனித உாிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்திருந்தது.

இந்நிலையில், நாளை 5ம் திகதி பிற்பகல் 2.30 மணிக்கு மனித உாிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முன்னிலையாகி விளக்கமளிக்கும்படி தெல்லிப்பழை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாாிக்கு அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin