காங்கிரஸ் கட்சியால் கச்சத்தீவு எவ்வாறு தாரை வார்க்கப்பட்டது என்பதை புதிய உண்மைகள் வெளிப்படுத்துவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் ஒரு பகுதியாக காணப்பட்ட கச்சத்தீவு 50 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய அரசால், 1974 ஆம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சியின்போது இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, கச்சத்தீவு பற்றி தனது எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.
“ கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்ப்பதற்கு காங்கிரஸும் திமுகவும் கூட்டுச் சேர்ந்தன.காங்கிரஸ், ஆட்சியில் இருந்த போது, இந்தியாவின் எல்லை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையைப் பாதுகாப்பதில் குறைந்த அக்கறை கொண்டிருக்கின்றது.” என அவர் தனது x தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனையடுத்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற தகவலை குறிப்பிட்டு பிரதமர் மோடி அவரது எக்ஸ் தளத்தில் அண்ணாமலையின் பதிவை பகிர்ந்துள்ளார்.
இந்த சம்பவம் ஒவ்வொரு இந்தியனையும் கோபப்படுத்துவதாக தெரிவித்த மோடி காங்கிரஸை ஒருபோதும் நம்ப முடியாது என தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் நலன்களை பலவீனப்படுத்தும் வகையில், 75 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி பணியாற்றும் விதம் தொடர்வதாக பிரதமர் பதிவிட்டு உள்ளார்.