“தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் எமது இலங்கைத் தமிழரசுக் கட்சி எந்தவொரு நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை. முதலில் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட வேண்டும். யார், யார் வேட்பாளர்கள் எனத் தெரிய வேண்டும். அதைத் தொடர்ந்து நாங்கள் கலந்துரையாடி முடிவெடுப்போம்.”
– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இன்று சனிக்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“மக்கள் ஆணையற்ற ஜனாதிபதியே தற்போது நாட்டில் இருக்கின்றார். எனவே, சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டியது மிகவும் அவசியம்.
யாரும் தேர்தலில் போட்டியிடலாம்
அத்தோடு தற்போது உள்ள மக்கள் ஆணையில்லாத நாடாளுமன்றம் வெகுவிரைவில் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
ஐனாதிபதி ரணில் விக்ரமசிங்க சொல்வது ஒன்று, செய்வது இன்னொன்றாக இருக்கின்றது. எனவே, நடத்த வேண்டிய தேர்தல்களைக் கூட நடத்தாமல் இருக்கின்ற இந்த ஐனாதிபதி இனியும் தாமதிக்காது ஐனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்.” – என்றார்.
ஐனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பிலிருந்து பொது வேட்பாளராக ஒருவரை நிறுத்துவதற்குப் பேசப்பட்டு வருவது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குச் சுமந்திரன் எம்.பி. பதிலளிக்கும்போது,
“இலங்கைத் தமிழரசுக் கட்சி இதைப் பற்றி இன்னமும் கலந்துரையாடவில்லை. தேர்தல் அறிவிக்கப்படுகின்றபோது இது சம்பந்தமாகக் கலந்துரையாடி முடிவெடுப்போம்.
மேலும், பொது வேட்பாளரோ அல்லது தனி வேட்பாளரோ அது எவருக்கும் இருக்கின்ற உரிமை. யாரும் தேர்தலில் போட்டியிடலாம். எவரையும் போட்டியிடக் கூடாது என்று சொல்லுகின்ற உரிமை எவருக்கும் கிடையாது.
மக்கள் தீர்மானிப்பார்கள்
இந்தத் தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் எமது தமிழரசுக் கட்சி எந்தவொரு நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை. முதலில் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட வேண்டும். யார், யார் வேட்பாளர்கள் எனத் தெரிய வேண்டும். அதைத் தொடர்ந்து நாங்கள் கலந்துரையாடி முடிவெடுப்போம்.” – என்றார்.
ஐனாதிபதித் தேர்தலில் வடக்கு – கிழக்கு தமிழ் மக்கள் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவை வழங்குவார்கள் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளமை தொடர்பில் சுமந்திரன் எம்.பியிடம் கேட்டபோது,
“அவர் மட்டுமல்ல ஒவ்வொரு கட்சியினரும் எல்லா மக்களின் வாக்கும் தங்களுக்குத்தான் என்று சொல்லுவார்கள். ஆகையினால் அதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டிய தேவையில்லை. எனவே, யாருக்கு வாக்களிப்பது என மக்கள் தீர்மானிப்பார்கள்.” – என்று பதிலளித்தார்.