தயாசிறி தலைமையில் புதிய கூட்டணி

இலங்கையின் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. எந்த திசையை நோக்கினாலும் தேர்தல் குறித்த காய்நகர்த்தலாகவே காணப்படுகின்றது.

ஜனாதிபதித் தேர்தலா பொதுத் தேர்தலா என்ற சந்தேகத்திற்கு மத்தியில் தேசிய காட்சிகள் தொடக்கி சுயேற்சை குழுக்கள் வரை தத்தமது இயலுமைக்கு ஏற்றாற்போல் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தொடங்கியுள்ளன.

எந்தத் தேர்தலாக இருப்பினும் இலங்கையின் பொருளாதாரம், கடன் மறுசீரமைப்பு, அடிப்படைத் தேவைகள், மனித உரிமை உள்ளிட்ட பல காரணிகள் செல்வாக்கு செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க மறுபுறத்தில் தேசிய காட்சிகள் முதற்கொண்டு அனைத்து மட்டத்திலும் ஒரு தரப்பு மீதி மற்றொரு தரப்பு குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டிருக்கும் நிலையில், கட்சித்தாவல்கள், புதிய கூட்டணி அமைத்தல் என்பனவும் இடம்பெறுகின்றன.

அந்தவகையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகரவின் தலைமையில் கூட்டணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

‘மனிதநேய மக்கள் கூட்டணி’ என பெயரிடப்பட்டுள்ள இந்த கூட்டணி எதிர்வரும் 20 ஆம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு கொழும்பு – லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச நிலையத்தில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

சுமார் நாற்பது சிவில் அமைப்புகள் புதிய கூட்டணிக்கு ஆதரவளிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது.

அத்துடன், வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சிகள் அன்றைய தினம் இந்த புதிய கூட்டணியுடன் சில ஒப்பந்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, புதிய கூட்டணியின் கொள்கைகளுக்கு பிரதான கட்சியொன்று இணங்கும் பட்சத்தில், குறித்த கட்சிக்கு ஆதரவளிக்க தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு இல்லாத நிலையில், தேசியத் தேர்தலில் மனிதநேய மக்கள் கூட்டணி சார்பில் அதன் தலைவர் தயாசிறி ஜயசேகர ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய கட்சிகளுக்குள் ஏற்கனவே உட்கட்சி பூசல் காணப்படும் நிலையில், இந்த புதிய கூட்டணியில் பலர் இணைவதற்கான சாத்தியம் காணப்படுகிறது.

இருப்பினும், கூட்டணியின் வெற்றி என்பது அதன் அடுத்தகட்ட செயற்பாடுகளிலேயே தங்கியுள்ளது.

Recommended For You

About the Author: admin