இஸ்ரேல் மீது பாலஸ்தீன பயங்கரவாத அமைப்பான ஹமாஸ் கடந்த ஆண்டு ஒக்டோபர் 7 ஆம் திகதி நடத்திய தாக்குதல் தொடர்பான பரபரப்பு தகவல்களை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ளது.
ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீதான தாக்குதலின் போது பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கான தெளிவான ஆதாரங்கள் இருப்பதாக ஐநாவால் நியமிக்கப்பட்ட போரில் பாலியல் வன்கொடுமைகள் குறித்த விசாரணை நடத்தும் நிபுணர்கள் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹமாஸால் சிறைபிடிக்கப்பட்ட இஸ்ரேலியப் பெண்கள் இன்னும் பலாத்காரத்துக்கு ஆளாகின்றனர் எனவும் ஐநா குழு தனது அறிக்கையில் கூறியுள்ளது. பெப்ரவரியில், நிபுணர்கள் குழு இஸ்ரேல் மற்றும் மேற்குக் கரையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.
காஸா எல்லையில் இஸ்ரேலுக்குச் சொந்தமான மூன்று பகுதிகளான நோவா இசை விழா, ரோட் 232 மற்றும் கிபுட்ஸ் ரெம் ஆகிய இடங்களில் இஸ்ரேலிய பெண்கள் பலாத்காரம் மற்றும் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பெரும்பாலான சம்பவங்களில் பெண்கள் முதலில் பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இறந்த பெண்கள் இரண்டு இடங்களில் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வன்புணர்வு சம்பவங்கள் குறித்து சாட்சியமளிக்குமாறு குழு கோரிய போதிலும் சாட்சியமளிக்க எவரும் முன்வரவில்லை. பலாத்கார சம்பவங்கள் தொடர்பான ஐநா குழு உறுப்பினர்கள் மொத்தமாக 5 ஆயிரம் புகைப்படங்கள் மற்றும் 50 மணிநேர சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளதுடன் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்களிடமும் உரையாடியுள்ளனர்.
ஹமாஸால் சிறைபிடிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட பலர் நேர்காணல் செய்யப்பட்டனர். இதனிடையே ஒக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸ் இஸ்ரேல் அமைப்பு இஸ்ரேல் மீது மின்னல் வேக தாக்குதலை நடத்தியது.
இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கான இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதுடன் மற்றும் மேலும் சிலர் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர்.
இதனையடுத்து ஒக்டோபர் 7 ஆம் திகதி முதல் இஸ்ரேல் இராணுவம் பாலஸ்தீனத்தின் காஸா மீது கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது.
அமெரிக்காவின் கோரிக்கைகளையும் மீறி இஸ்ரேல் தொடர்ந்தும் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.