ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏனைய மூவரின் உயிருக்கும் உத்தரவாதம் இல்லையென சட்டத்தரணி புகழேந்தி தெரிவித்துள்ளார்.
அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாம் என்பது சிறையை விட மிகவும் கொடூரமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மரணக் கொட்டடி
சிறப்பு முகாம் என்பதே மரணக் கொட்டடி ஆகும். சாந்தன் இறப்பதற்கு மூன்று வாரங்களுக்கு முன்னர் அங்கிருந்த மற்றொருவர் உயிரிழந்தார்.
அந்த முகாம் மூடப்பட வேண்டும். அங்கிருப்பவர்கள் உடன் வெளியிடங்களுக்கு மாற்றப்பட வேண்டும்.
முன்பு அது பெண்களுக்கான சிறையாக இருந்தது. இன்று அதன் பெயரை சிறப்பு முகாம் என்று மாற்றியுள்ளனர். மற்றப்படி அது சிறைதான்.
இங்கு பல்வேறு கட்டுப்பாடுகளை தற்போது விதித்துள்ளனர். பல பாதுகாப்பு வேலிகளை அமைத்து இந்த மூவரையும் தடுத்து வைத்துள்ளனர்.
மன நோயாளியான சாந்தன்
திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சாந்தன் கல்லீரல் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 28 ஆம் திகதி உயிரிழந்தார்.
அவரின் உடல் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் எள்ளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் புதைக்கப்பட்டது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சாந்தன் சார்பில் சட்டத்தரணி புகழேந்தி பல ஆண்டுகளாக வழக்காடியிருந்தார்.
சாந்தன் உயிரிழந்த பின்னர் அவரின் உடலை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான அனைத்து சட்ட ஏற்பாடுகளையும் செய்த சட்டத்தரணி புகழேந்தி, சாந்தனின் உடல் புதைக்கப்படும் இறுதி நிமிடம் வரையில் உடனிருந்தார்.
இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் இன்று சிறப்பு செய்தியாளர் சந்திப்பை நடத்தியிருந்தார்.
இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,
“சாந்தன் 32 ஆண்டுகள் மன உறுதியுடன் சிறையில் இருந்தார். ஆனால், ஒரு வருடத்திற்குள் அவர் திருச்சி சிறப்பு முகாமில் மன நோயாளியாக மாற்றப்பட்டார். உடல் அளவிலும் செயற்பட முடியாத அளவிற்கு மாறினார்.
சிறப்பு முகாமின் வடிவமைப்பு கொடுமையானது
சிறப்பு முகாமின் வடிவமைப்பு என்பது மிகவும் கொடுமையானது. இந்நிலையில், அங்கிருக்கு முருகன், ரொபட் பாயஸ் மற்றும் ஜெயகுமார் ஆகியோரை உடன் மீட்க வேண்டும்.
அதற்கு இலங்கையில் இருக்கக் கூடிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முயற்சி எடுக்க வேண்டும். தமிழகத்தில் இருக்கும் அரசியல் கட்சிகளுக்கு நாங்கள் அழுத்தம் கொடுக்கின்றோம்.
இரு தரப்பினரும் இணைந்து செயற்பட்டு அங்கிருக்கும் மூவரையும் காப்பற்ற வேண்டும். அதற்காக நான் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றேன்.
“என்னை இலங்கைக்கு அனுப்பிய பின்னர் எனக்கு எப்படி வரவேற்பு கிடைக்கும் என்பதை” நீங்கள் பார்க்க முடியும் என்று சாந்தன் என்னிடம் கூறியிருநு்தார்.
அதனைய அவரின் மரணத்தில் மூலம் கண்டுகொண்டேன். அவர் மீது மக்கள் எவ்வளவு பற்று கொண்டிருந்தார்கள் என்பதை அறிந்துகொண்டேன். அதை நினைத்து நான் பெருமைப்படுகின்றேன்” என்றார்.