யாப்பு விதிகள் மீறப்பட்டதை சிறிதரன் தரப்பு ஒப்புக் கொண்டது

தமிழரசு கட்சியின் யாப்பு விதிகளை அப்பட்டமாக மீறியுள்ளதை ஏற்றுக்கொள்வதாக எதிர்த்தரப்பினர் மன்றில் தெரிவித்துள்ளனர் என்று வழக்காளிகள் சார்பில் மன்றில் வாதாடிய சட்டத்தரணிகள் “ஒருவன்” செய்திச்சேவைக்கு தெரிவித்துள்ளார்.

இதேவேளை வழக்காளிகளுக்கு நிவாரணம் வழங்க எதிராளிகள் இணங்குவதாகவும் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் யாப்பு விதிகளுக்கு அமைய தீர்மானங்கள் மீள எடுக்கப்படும் எனவும் எதிராளிகள் மன்றில் உறுதியளித்துள்ளனர்.

இதேவேளை மீளத் தேர்தல் நடத்துவதற்கும் சம்மதம் தெரிவித்துள்ளதாக எதிர்த்தரப்பினர் சார்பில் முன்னிலையாகிய ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சியின் தலைவர், செயலாளர் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் தெரிவு யாப்பின் விதிகளைப் பின்பற்றாது இடம்பெற்றதாக தெரிவித்து திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு கடந்த 15 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் அதற்கான விசாரணை இன்றையதினம் இடம்பெற்றிருந்த நிலையில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இதேவேளை ஏழாவது எதிரியான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மன்றில் சமூகமளிக்காத காரணத்தினால் எதிர்வரும் மார்ச் மாதம் ஐந்தாம் திகதி வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எதிராளிகளான சிறிதரன், சுமந்திரன், குகதாசன் ஆகியோர் சார்பிலும் சட்டத்தரணிகள் முன்னிலையாகி தமது பக்க விளக்கங்களையும் மன்றில் தெரிவித்திருந்தனர்.

கடந்த ஜனவரி மாதம் 21ஆம் திகதி, 27 ஆம் திகதிகளில் இடம்பெற்ற தலைவர் மற்றும் செயலாளர் உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள் தெரிவுகள் யாப்புவிதிகளை மீறிய செயல் என வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin