பாதாள உலக குழுக்களுக்கு எதிராக செயற்படும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பாதாள உலகத்தினரால் அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதாகவும், அவ்வாறான அதிகாரிகள் கொல்லப்பட்ட சம்பவங்கள் தொடர்பாகவும் செய்திகள் அண்மையில் வெளியாகியிருந்தன.
அவ்வாறு பாதாள உலகக் குழு உறுப்பினர்களினால் தனக்கும் தன்னுடைய குடும்பத்துக்கும் விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தல்கள் காரணமாக கொழும்பு குற்றவியல் பிரிவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவின் நிலையத் தளபதி , பொலிஸ் பரிசோதகர் துமிந்த ஜயதிலக்க பாதுகாப்புக் கருதி வெளிநாடு சென்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அதன்படி, பொலிஸ் பரிசோதகருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்களில் கஞ்சிபாணி இம்ரானும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 14ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து பொலிஸ் பரிசோதகர் துமிந்த ஜயதிலக்க பிரான்ஸ் நாட்டை நோக்கி புறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலஞ்சம் பெறும் குற்றச்சாட்டுடன் தொடர்புபட்ட சந்தேகநபர்கள் பொலிஸ் பரிசோதகர் துமிந்த ஜயதிலக்க மூலம் கைது செய்யப்பட்டதன் பின்னர் “ஹீனடியன மகேஷ்” எனப்படும் பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்தவர் எனத் தெரிவித்து அவருக்கு தொலைபேசி அழைப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை , ஆதுருப்பு வீதி பொலிஸ் நிலையத்தினுள் சந்தேக நபர்கள் இருவருக்கு விஷம் கொடுத்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் பொலிஸ் பரிசோதகர் துமிந்த ஜயதிலக்க தலைமையிலான குழுவினரால் மேற்கொள்ளப்பட்டது.
குறித்த விசாரணைகளின் போது, சந்தேக நபர்கள் பலர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து பொலிஸ் பரிசோதகருக்கு பிரபல போதைப்பொருள் வியாபாரியான கஞ்சிபாணி இம்ரானிடமிருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் மூலம் விடுக்கப்படும் கடுமையான கொலை அச்சுறுத்தல்களைக் கருத்திற்கொண்டு , கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் பொலிஸ் பரிசோதகர் துமிந்த ஜயதிலக்கவுக்கு உத்தியோகபூர்வ துப்பாக்கி ஒன்றையும் வழங்கியுள்ளனர்.
எவ்வாறாயினும் , தனது மனைவி மற்றும் ஏழு வயது நிரம்பிய தனது மகளை இந்நாட்டில் பாதுகாப்பான இடத்தில் மறைத்து வைத்தே தனது பாதுகாப்பிற்காக அவர் பிரான்ஸ் நாட்டிற்கு சென்றுள்ளார்.
இவ்வாறான பின்னணியில் , பிரான்ஸ் நாட்டிலிருந்து இலங்கையின் பிரதான சிங்கள ஊடகமொன்றுக்கு பொலிஸ் பரிசோதகர் கருத்து வெளியிட்டுள்ளார்.
இவ்வாறான கொலை மிரட்டல்கள் காரணமாக தனது மகளின் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் கூட முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் இதன்போது தெரிவித்தார்.
“கடந்த காலங்களில் கொழும்பில் நடந்த அனைத்து கொலைகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் அனைவரையும் என்னால் கைது செய்ய முடிந்தது.
ஆனால் இந்த விசாரணைகள் தொடர்ந்தபோது பாதாள உலகக் கும்பல் அனைவரையும் கைது செய்த போது எனது உயிருக்கு மற்றும் எனது மனைவி, மகளின் உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது.
அவற்றையும் மீறி நான் எனது பணியை தொடர்ந்தேன். இறுதியாக 14ஆம் திகதி இலங்கையிலிருந்து வந்தேன்.
அன்று பிரான்ஸ் வரும்போது கூட ஆதுருப்பு வீதி பொலிஸில் சந்தேகநபர்களுக்கு விஷம் வழங்கியமை தொடர்பில் விசாரணைகளை முடித்து விட்டே வந்திருந்தேன்.
தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் காரணமாகவே நான் நாட்டிலிருந்து வந்தேன். நான் இலங்கையில் இருந்து வந்தாலும் எனது மகளும் மனைவியும் என்னுடைய உத்தியோகபூர்வ வீட்டிலிருந்து மறைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களது வாழ்க்கைக்கு பெரும் பிரச்சினை இருப்பதால் அவர்களை பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நாடு ஒரு நிலையான சூழ்நிலைக்கு வந்து சரியான பாதையில் சென்றால் இன்னும் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான சேவை காலம் எனக்கு உண்டு. எப்போது வேண்டுமானாலும் வந்து நாட்டுக்காக உழைக்க தயாராக இருக்கிறேன்.” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு குற்றவியல் பிரிவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவின் நிலையத் தளபதி பொலிஸ் பரிசோதகர் துமிந்த ஜயதிலக்க கடந்த ஆண்டில் அதிகளவான கொலைச் சந்தேக நபர்களை கைது செய்த அதிகாரி என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை , கடந்த ஆண்டில் அதிகளவான சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகளை இவர் கைது செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
“ஹரக்கட்டா” குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் இருந்து தப்பிச் சென்ற வழக்கை விசாரித்த துமிந்த ஜயதிலக்க, அது தொடர்புடைய பல சந்தேக நபர்களைக் கைது செய்ததுடன், அவர்களில் பெரும்பாலானோர் தற்போது கொழும்பு குற்றப் பிரிவின் உத்தரவின் பேரில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் , அவர்களுக்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறான பின்னணியில், இவ்வாறான அதிகாரிகளைப் பாதுகாப்பதும், பாதாள உலகத்தையும், போதைப்பொருள் கடத்தலையும் தடுப்பது அரசாங்கத்தின் பிரதான பொறுப்பாகும்.