இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது பூகோள பொருளாதார அரசியல் காய்நகர்த்தல்களை ஆரம்பித்துள்ளார். இந்தியா, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் அரசியல் நகர்வுகளை மேற்கொண்டுவரும் ரணில், தனது அரசியல் இருப்பிற்கு ஆபத்தற்ற வகையில் நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றார்.
இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் ஒரு முகத்தையும் சீனாவிற்கு இன்னொரு முகத்தையும் காண்பித்து தனது அரசியலை நகர்த்திக் கொண்டிருக்கிறார் ரணில்.
ஹம்பாந்தோட்ட துறைமுகத்தை அபிவிருத்தி செய்து மியன்மார் துறைமுகம் மற்றும் கிழக்கு சீனாவின் சோங்கிங் துறைமுகத்துடன் இணைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.
மேலும் துறைமுகத்தை ஆபிரிக்காவுடன் இணைத்து பாரிய முதலீட்டு நகர்வை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நகர்வு நிச்சயமாக இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தும்.
இலங்கை தீவில் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிராந்திய வல்லரசான இந்தியா, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொடர்பில் அதிருப்தியில் இருக்கின்றது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் அவ்வளவாக நம்பிக்கை இந்தியாவிற்கு இல்லை.
ஏற்கனவே அவருடைய தந்தை ரணசிங்க பிரேமதாச, இந்திய அமைதிப் படையினரை வெளியேற்றிய விவகாரம் இன்னமும் இந்தியாவின் கவனத்தில் உள்ளது.
இந்தியாவின் புதிய கருசனை
இந்த நிலையில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸ்நாயக்கவை இந்தியா புதுடெல்லிக்கு அழைத்து பேசியிருந்தது.
இத்தகைய பின்னணியில் ரணில் விக்கிரமசிங்க சீனாவின் பொருளாதார நகர்வுகளை இலங்கைக்குள் மேலும் விரிவாக்க எடுத்துள்ள முயற்சியானது இந்தியாவிற்கு மேலும் தலையிடியாக இருக்கப் போகின்றது. ஆனாலும் இந்தியாவைத் திருப்திப்படுத்தும் வகையில் திருகோணமலையில் சில திட்டங்களுக்கு ரணில் அனுமதியும் வழங்கியுள்ளார்.
ஆனாலும் ரணிலை முற்றுமுழுதாக கட்டுப்பாட்டிற்குக் கொண்டுவர முடியாத நிலை இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ளது. இலங்கை்கான புதிய இந்திய தூதுவர் சந்தோஸ் ஜா பல்வேறு அரசியல் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டுவருகின்றனர்.
அரசியல் ரீதியாக பல்வேறு இராஜதந்திர நகர்வுகளை மேற்கொண்டு, ஆட்சியாளர்களை தம்பக்கம் வைத்துக் கொள்ளவதற்கு சந்தோஸ் ஜா கருசனை காட்டுகின்றார்.
ஆக இலங்கையில் இந்தியா, அரசியல் மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு எத்தனித்துள்ள நிலையில் ரணில் தமது இராஜதந்திர நகர்வுகளில் ஈடுபட ஆரம்பித்துள்ளார்.
வடக்கு கிழக்கு, மலையகம் என இந்தியாவின் கருசனை விரிவடைந்துள்ள நிலையில் தற்போது தென்னிலங்கையினையும் நோக்கி நகர்ந்திருப்பது, மிகப் பெரிய செய்தி ஒன்றை சீனாவிற்கு இந்தியா சொல்ல முற்படுகின்றது.
ஆகவே பிராந்திய வல்லரசுகளின் போட்டியில் இலங்கைத் தீவில் பல்வேறு அரசியல் மாற்றம் நிகழப் போவது தெரிகிறது.
இத்தகைய பின்னணியில் தமிழ்த் தேசிய கட்சிகள் இந்தியாவை தம்பக்கம் ஈர்த்து ஈழத்தமிழரின் தேசிய பிரச்சனைக்கு அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்ள அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.