இந்தியாவின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் சர்ச்சைக்குரிய சீன ஆராய்ச்சிக் கப்பல் மாலைத்தீவில் நங்கூரமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள புவிசார் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் சீனக் கப்பல் மாலைத்தீவு சென்றுள்ளதுடன், மாலைத்தீவு இந்தியாவுடன் முரண்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் மாலேக்கு அருகிலுள்ள திலாஃபுஷி தொழில்துறை துறைமுகத்தில் சீனாவின் Xiang Yang Hong 3 ஆராய்ச்சிக் கப்பல் நிறுத்தப்பட்டுள்ளதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.
100 மீட்டர் நீளமுள்ள (328 அடி) கப்பல் வியாழன் மாலை மாலே அருகே நங்கூரமிடப்பட்டுள்ளதாக மரைன்ட்ராஃபிக் இணையதளம் தெரிவித்துள்ளது.
மாலைத்தீவின் சீன சார்பு அரசாங்கம், கப்பல் தனது பிராந்திய கடற்பகுதியில் இருக்கும்போது “ஆராய்ச்சியை” நடத்தாது என்ற நிபந்தனையின் பேரில் அனுமதி வழங்கியுள்ளதாக கூறியுள்ளது.
பணியாளர்களை மாற்றுவதற்கும் தேவையானப் பொருட்களை பெற்றுக்கொள்வதற்காகவே குறித்தப் கப்பல் வந்துள்ளதாக மாலைத்தீவு அரசாங்கம் அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இந்தக் கப்பல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக இந்தியா குற்றம் சுமத்தியுள்ளது. இந்தியப் பெருங்கடலில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவதையும் இந்தியா கண்டித்துள்ளது.
2022 ஆம் ஆண்டு முதல் சீன ஆய்வுக் கப்பல்கள் இலங்கைக்கு அடிக்கடி வந்துச் சென்றுள்ளன்.
எனினும், இந்தியாவிடம் இருந்து ஆட்சேபனைகள் எழுந்ததை அடுத்து, Xiang Yang Hong 3க்கு இலங்கை மறுப்பு தெரிவித்திருந்தது.
இந்தப் பின்னணியிலேயே குறித்த சீனக் கப்பல் மாலைத்தீவில் நங்கூரமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.