பாகிஸ்தானில் புதிய அரசாங்கத்தை அமைக்க இணக்கம்

பாகிஸ்தானில் ஆட்சியை அமைப்பதில் நீடித்துவந்த சிக்கல்கள் ஓரளவு இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதுடன், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான அறிவிப்பு இவ்வாரம் வெளியாக உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் இராணுவம் ஆதரவு பெற்ற பி.எம்.எல்- என் கட்சியும் பி.பி.பி கட்சியும் இணைந்து ஆட்சி அமைக்க உள்ளன.

முன்னாள் பிரதமரான 72 வயது ஷெபாஸ் ஷெரீப் புதிய பிரதமராகவும், முன்னாள் ஜனாதிபதியும் பிலாவல் பூட்டோவின் தந்தையுமான 68 வயது ஆசிப் அலி சர்தாரி (வயது 68) நாட்டின் புதிய ஜனாதிபதியாகவும் பதவி ஏற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

ஷெரீப், 2022இல் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மூலம் இம்ரான் கான் வெளியேற்றப்பட்டபோது அவருக்குப் பதிலாக பிரதமராக நியமிக்கப்பட்டார்.

இரு கட்சிகளும் பதவி பகிர்வு குறித்து கடந்த சில நாட்களாக பேச்சுவார்த்தை நடத்திவந்த நிலையில் கூட்டணி குறித்த தெளிவான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. பிஎம்எல்என் 75 இடங்களை வென்றது, அதே நேரத்தில் பிபிபி 54 இடங்களுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.

நாட்டை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்லவும், இந்த ஆட்சி சிறப்பாக இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் இரு கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர்.

அமைச்சர் பதவிகள் குறித்த விவரங்கள் இன்னும் சில நாட்களில் வெளியிடப்படும் என்று பிலாவல் பூட்டோ தெரிவித்தார்.

நாட்டின் பொருளியல் நெருக்கடிக்கு தீர்வு காண்பதே கூட்டணியின் நோக்கம் என்று அவர் விவரித்தார்.

இரு பெரும் கட்சியின் கூட்டணியில் சில சிறிய கட்சிகளும் இணைந்து கொண்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் கூறின. மேலும் இம்மாத இறுதிக்குள் அந்நாட்டு நாடாளுமன்றம் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பி.டி.ஐ. கட்சியின் ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர்கள் தேர்தலில் அதிக அளவில் வெற்றிபெற்ற போதிலும், அவர்கள் ஆட்சி அமைக்க முடியாமல் போனது.

கட்சிகளின் கூட்டணி குறித்து இம்ரான் கான் ஆதரவாளர்கள் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

பொருளாதார சரிவால் பெரும் பின்னடைவை சந்தித்துள்ள பாகிஸ்தானில் கடந்த 8ஆம் தினதி, குண்டு வெடிப்பு, கலவரங்களுக்கிடையே பொதுத் தேர்தல் நடந்தது.

உடனடியாக வாக்கு எண்ணிக்கையும் தொடங்கி நடந்தது. ஆனால் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சி அமைப்பதில் நீடித்து வந்த இழுபறி முடிவுக்கு வந்துள்ளது.

Recommended For You

About the Author: admin