உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன.
உக்ரேன் முழுவதும் சாதாரண மக்களின் வாழ்க்கையைப் பெரிதும் புரட்டிப் போட்டுவிட்டது இந்தப் போர்.
தலைவனை இழந்த குடும்பங்கள், சிறை பிடிக்கப்பட்ட மகன்கள் வீடு திரும்பக் காத்திருக்கும் பெற்றோர், வெறிச்சோடிய வகுப்பறைகள், பாழாகிக் கிடக்கும் விளைநிலங்கள் எனத் துயரின் குரல் ஓங்கி ஒலிக்கிறது.
பாடசாலைக் கல்வி முற்றாக முடக்கம்
நாடெங்கும் கல்லறைகளில் ‘போரில் உயிர்நீத்த வீரர்கள்’ பகுதி எனப் புதிதாக ஒதுக்கப்பட்டுள்ளது. இவர்களில் பலர் போருக்குமுன் இராணுவத்தில் பணிபுரிந்தவர்கள் அல்லர்.
உயிரிழப்புகள் ஒருபுறமிருக்க, போரால் உக்ரேனியர்களின் வாழ்க்கை பல விதங்களில் பாதிக்கப்பட்டுள்ளது.
பலர் வேலை இழந்துள்ளனர். பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 1,300 பாடசாலைகள் போரில் சேதமடைந்துள்ளன.
ஆகாயத் தாக்குதல்களின்போது மாணவர்கள் அனைவரையும் பாதுகாக்க, போதிய அளவில் குண்டு தாக்காத பதுங்கிடங்கள் பாடசாலைகளில் இல்லாததே இதற்குக் காரணம். ஆசிரியர்கள் இணையம் வழியாகப் பாடம் நடத்துகின்றனர்.
போர்க்கைதிகளாகப் பிடித்துச் சென்றார்கள்
நேரடியாகப் பள்ளிக்குச் செல்ல முடியாத சூழல் மாணவர்களின் கல்வியை மட்டுமன்றி அவர்களின் சமூகத் திறன்களையும் பாதித்துள்ளதாகப் பெற்றோர் கூறுகின்றனர்.
இராணுவத்தினருக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களைப் பொட்டலமிட தொண்டூழியர்கள் முன்வந்துள்ளனர். இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் முன்பின் அறிமுகமில்லாதவர்களும்கூட நண்பர்களாகிவிட்டனர்.
ஏறத்தாழ 8,000 பேரை ரஷ்யா போர்க்கைதிகளாகப் பிடித்துச் சென்றதாக உக்ரேனிய அதிகாரிகள் கூறுகின்றனர். அவர்களில் சுமார் 3,000 பேர் மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளனர். எஞ்சியோரின் குடும்பத்தினர் ஏக்கத்துடன் வழிமேல் விழிவைத்துக் காத்துள்ளனர்.
பலரும் நாட்டைக் காக்க போர்முனைக்குச் செல்ல நேரிட்டதால் வேளாண்மை உள்ளிட்ட இதர தொழில்களைச் செய்ய ஆளில்லாமல் போய்விட்டதாகத் தெரிகிறது.
தற்காலிக வேலை கிடைத்தாலும், நிச்சயமற்ற சூழலில் பிள்ளை பெறுவதைத் தள்ளிப்போடுகின்றனர் சிலர்.
எது எப்படியாயினும் ரஷ்யா ஆக்கிரமித்த உக்ரேனியப் பகுதிகளை மீட்பது முக்கியம் என்ற உணர்வு உக்ரேனியர்களிடையே மேலோங்கியிருக்கிறது.