இலங்கை அரசாங்கத்தின் தேர்தல் அறிவிப்புக்களுக்கு பின்னர், இந்த வருடம் தேர்தல் வருடமாக பேசப்படுகின்றது.
இவ்வாறான நிலையில் 2024 ஆம் ஆண்டு ஆரம்பமானது முதல் இலங்கையின் அரசியல் கட்சிகள் அனைத்தும் தமது கொள்கை பரப்பு பிரசாரங்களை ஆரம்பித்துள்ளன.
அதேவேளை, தமிழத்தேசிய பரப்பிலுள்ள தமிழ்த்தேசியக் கட்சிகளும் தமது கட்சிகளின் பிரசாரங்கள் மற்றும் ஊடக சந்திப்புக்கள் மூலம் ஏனைய கட்சிகளை விமர்சிப்பது, சேறுபூசும் செயற்பாடுகள் என்பவற்றை ஆரம்பித்துள்ளன.
இந்நிலையிலேயே, தமித்தேசியக் கூட்டமைப்பின் பிரதான கட்சியான தமிழரசு கட்சி மாற்றுத் தலைமையுடன் புதிய அரசியல் பயணம் ஒன்றை ஆரம்பிக்கும் நோக்கில் தலைவர் தெரிவு உட்பட கட்சி உறுப்பினர் தெரிவு என்பவற்றுடன் இந்த புதிய வருடத்தை ஆரம்பித்திருந்தது.
கட்சி தலைமைத்துவம்
எனினும் கட்சியின் தலைமைத்துவப் போட்டி, உட்கட்சி பூசல் என்பவற்றால் தெரிவு செய்யப்பட்ட தலைமையும் உறுப்பினர்களும் தத்தமது கடமைகளை சரிவர நிறைவேற்ற முடியாத இழுபறி நிலையில் உள்ளனர்.
தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் பிரதான கட்சியும் பாரம்பரிய கட்சியுமான தமிழரசு கட்சி தற்பேது இரண்டும் கெட்டான் நிலையில் தள்ளாடும் ஒரு கட்சியாக பார்க்கப்படுகின்றது.
அதேவேளை, கட்சியின் பொதுச்செயலாளர் பதவி பேசுபொருளாக அமைந்துள்ளது. இந்த வருடம் தேர்தல் காலம் என்பதால் இப்போது அதைப் பற்றியே பலரும் பேசிவரும் அதேவேளை, பலராலும் பரிகசிக்கப்படுகின்ற நிலைக்கு வந்துள்ளது.
இந்த வகையில், இலங்கை தமிழரசுக்கட்சிக்கு தெரிவு செய்யப்படும் செயலாளர் தன்னிச்சையாக செயற்பட முடியாது என்பது கட்சியின் யாப்பிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.
கட்சியின் தலைவர், செயலாளர் உட்பட நிர்வாகமொன்று தெரிவு செய்யப்படுகின்ற போது கட்சியின் அனைத்து பொறுப்புக்களும் தலைவரிடமே இருக்கும்.
கட்சி யாப்பு
தலைவரது பணிப்பிற்கமைய நிர்வாக கடமைகளை செயற்படுத்துகின்ற ஒருவராகவே செயலாளர் இருப்பார்.
அதனை விடுத்து செயலாளர் தன்னிச்சையாக செயற்பட முடியாது என்றே கட்சி யாப்பிலும் இருக்கின்றது.
எனவே கட்சி உறுப்பினர்களுக்கிடையே சரி பிழை என்பதற்கு அப்பால் போட்டிகள் தவிர்க்கப்பட வேண்டும். கட்சிக்குள் பிளவுபடவிடாமல் செயற்பட வேண்டும்.
தமிழினத்தை இனவாதம், மதவாதம் மற்றும் ஏனைய உரிமை மறுப்புக்கள், அடிமைப்படுத்தலிலிருந்து மீட்கும் சரியான மீட்பர்களாக செயற்பட வேண்டும் என்பதே தமிழ் மக்களின் அதீத அபிலாசை என்பதை உணர்ந்தும் செயற்பட வேண்டும்..