தம்புள்ளையில் நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான பரபரப்பான மூன்றாவது டி20 போட்டியின் இறுதி ஓவரில் நோ-பால் வழங்கத் தவறியதற்காக இலங்கை டி20 அணித் தலைவரும் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளருமான வனிந்து ஹசரங்க, நடுவர் லிண்டன் ஹனிபாலை (Lyndon Hannibal) நேரடியாக சாடியுள்ளார்.
நேற்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் பின்னர் ஹசரங்கா, “நடுவர் ஹன்னிபால் இதனைவிட வேறு ஒரு தொழிலை மேற்கொண்டால் நன்றாக இருக்கும்” என்று பகிரங்கமாக சாடிப் பேசியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான நேற்றைய மூன்றாவது டி20 போட்டியில் இலங்கை அணி 210 என்ற வெற்றி இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடியது.
இலங்கையின் வெற்றிக்கு இறுதி மூன்று பந்துகளில் 11 ஒட்டம் இருக்க கமிந்து மெண்டீஸ் ஆப்கான் பந்து வீச்சாளர் வஃபாடர் மொமண்டின் பந்து வீச்சினை எதிர்கொண்டார்.
மூன்றாவது பந்தானது பிட்ச் இல்லாமல் கமிந்து மெண்டீஸின் இடுப்புக்கு மேல் சென்றது.
இதனால், ஸ்கொயர் லெக் நடுவர் ஹன்னிபால் முறைப்படி நோ-பால் அறிவிக்கத் தவிறனார்.
அதையடுத்து அதிருப்தியடைந்த துடுப்பாட்ட வீரர் கமிந்து மெண்டீஸும் நோ-பாலுக்கான கோரிக்கையினை நடுவர்களிடம் முன்வைத்தார்.
தற்போதைய ஐசிசி விதிகளின்படி நோ-பால்களில் சந்தேகங்கள் இருந்தால், மூன்றாம் நடுவர் மதிப்பாய்வுகளை முன்னெடுக்க கள நடுவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
எனினும் அவ்வாறான நடவடிக்கை எதனையும் ஸ்கொயர் லெக் நடுவர் ஹன்னிபால் மேற்கொள்வில்லை. நோ-பாலும் வழங்கவில்லை.
கமிந்து மெண்டீஸ் ஆடுகளத்தில் கிறீஸை தாண்டாமல் நின்றிருந்தாலும் பந்து வீச்சு அவரது இடுப்பை விட உயரமாகவே இருந்திருக்கும்.
ஐசிசி நிர்ணயித்த விளையாட்டு விதிகளின் அடிப்படையில், இது நோ-பால் என்று கருதப்படுகிறது.
எனவே, இக்கட்டான நிலையில் நடுவரின் இந்த செயற்பாட்டினால் அதிருப்தியடைந்த இலங்கை டி20 அணியின் தலைவர் வனிந்து ஹரசங்க, போட்டியின் பின்னர் நடுவரின் செயற்பாட்டை சாடிப் பேசியுள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஹசரங்க,
சர்வதேச போட்டியில் இப்படியெல்லாம் நடக்கக் கூடாது.
பந்து இடுப்பு உயர அளவில் இருந்திருந்தா பிரச்சினை இல்லை. ஆனால் பந்து அந்த உயரத்தையும் விஞ்சியுள்ளது. கொஞ்சமிருந்தால் பந்து துடுப்பாட்ட வீரரின் தலையில் பட்டிருக்கும்.
அதை நடுவரால் கணிக்க முடியவில்லை என்றால், அவர் சர்வதேச கிரிக்கெட்டுக்கு ஏற்ற நடுவர் அல்ல. அவர் வேறு ஒரு வேலையைச் செய்தால் நன்றாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.
ஆப்கானிஸ்தானுடான நேற்றைய ஆட்டத்தில் இலங்கை மூன்று ஓட்டங்களினால் தோல்வியடைந்திருந்தாலும், மூன்று போட்டிகள் கொண்டி டி20 தொடரினை 2:1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.