அதிகரிக்கும் வீட்டு வன்முறை: சமூக சீரழிவாகும் போதைப்பாவனை

இலங்கையில் தற்போது பெண்களுக்கெதிரான வன்முறைகளும் சிறுவர் துஷ்பிரயோகங்களும் அதிகரித்த வண்ணமே காணப்படுகின்றன.

நாட்டில் பெண்களுக்கும் சிறுவர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்பது தற்போது பாரிய ஒரு பிரச்சினையாகவும் சவாலாகவும் மாறியுள்ளது.

வடகிழக்கு மற்றும் மலையகம் போன்ற தமிழர் தாயகப் பகுதிகளில் இவ்வாறான பிரச்சினைகள் தற்போது விஸ்வரூபம் எடுத்து வருகின்றன.

தொழில் வாய்ப்பின்மை

கொவிட் -19 நிலைமைக்கு பின்னரான காலப்பகுதியில் நாடு அடைந்த பொருளாதார வீழ்ச்சி என்பது மக்களுக்கு பாரிய சுமையாக மாறிவிட்டது.

இந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் மேலும் பொருளாதாரம் வங்குரோத்து நிலையை அடைந்திருந்தது.

கல்வி , சுகாதாரம் , தொழில் போன்ற அனைத்து துறைகளிலும் பொருளாதார வீழ்ச்சி என்பது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இத்தகைய பின்னணியில் இளைஞர்களுக்கு நாட்டில் தாம் கற்ற கல்வியை பயன்படுத்தி தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக பல இளைஞர்கள் நாட்டை விட்டு தொடர்ச்சியாக வெளியேறிக்கொண்டிருக்கின்றனர். இன்னொரு பக்கத்தில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகிக்கொண்டிருக்கிறார்கள். இதனால் நாட்டில் என்றும் இல்லாத வகையில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

சமூக மட்டத்திலும் சரி குடும்ப மட்டத்திலும் சரி வன்முறை அதிகரித்த வண்ணமே உள்ளது.

பொருளாதார சீர்கேடு காரணமாக அவர்களுக்கான வேலைவாய்ப்புகள் சரி வர கிடைக்கப்பெறாமை காரணமாக இளைஞர்கள் தங்களுடைய வாழ்க்கையை சீரற்ற விதத்தில் கொண்டு செல்கின்றனர்.

அவற்றுள் போதைப்பொருளுக்கு அடிமையாதல் மிகவும் முக்கியமான ஒரு காரணியாக அமைகிறது.

தற்கொலை வீதம் அதிகரிப்பு

வீட்டு வன்முறை , பொருளாதார சுமைகள் மற்றும் அதியுச்ச போதைப்பொருள் பாவனை காரணமாக தற்கொலைகள் நாட்டின் பல பகுதிகளிலும் ஆங்காங்கே அதிகரித்துள்ளன.

சிறுவர் துஷ்பிரயோகம்

அண்மைய நாட்களில் கூட தலைமன்னார் பிரதேசத்தில் 10 வயது சிறுமியொருவரை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்து அவரைக் கொடூரமாக கொலை செய்திருந்த சம்பவம் நாட்டை உலுக்கிப்போட்டது.

இவ்வாறு பல சம்பவங்கள் பதிவாகி வருவதற்கு போதைப்பொருள் அடிப்படையாக அமைகின்றது.

இதன் பின்னணியில் அரசியல்வாதிகளும் , அரசியல் தலைவர்களும் பெரும் பங்கு வகிக்கின்றமை கவலைக்குரிய விடயமாக உள்ளது.

அரசியல்வாதிகளும், பிரபல தொழிலதிபதிபர்களும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக பகிரங்க குற்றச்சாட்டுகளும் காணப்படுகின்றன.

இந்த நிலையில் மாற்றங்களை கொண்டு வருவதன் ஊடாகவே நாட்டில் சிறந்த ஒரு இளைஞர் சமுதாயத்தை கட்டியெழுப்பக்கூடியதாக அமையும்.

Recommended For You

About the Author: admin