தமிழ் மக்களுக்கு எதிரான போருக்கு குறிப்பாக இறுதிகட்ட முள்ளிவாய்க்கால் போருக்கு ஜேவிபி ஒத்துழைப்பு வழங்கியது என்பதை அனுரகுமார திசாநாயக்க ஒப்புக் கொண்டிருக்கின்றார்.
கொழும்பிலுள்ள தனியார் இலத்திரனியல் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில், ஜேவிபி எனப்படும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க இவ்வாறு பகிரப்படுத்தியிருக்கிறார்.
தமிழர்களுக்கு எதிரான ஒரு தலைவரை கொண்டுவர வேண்டுமென்ற பிரச்சாரத்துடன் கடந்த 2005ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில், தமது கட்சி ஆதரவு வழங்கிய விடயத்தை ஒப்புக்கொள்கிறார்.
அதிகாரத்தை பெற்ற மஹிந்த
“எமது நாட்டின் வரலாற்றில் அனைத்து அரசியலும் அடுத்தவர்களுக்கு எதிராக இருந்தது. 2005இல் மஹிந்த தமிழர்களுக்கு எதிராக அதிகாரத்தை பெற்றுக்கொள்கிறார்.
அப்போதிருந்த அந்த அரசியல் சூழல் அதுதான்!
அப்போது தமது ஆதரவை, மஹிந்தவுக்கு வெளிப்படுத்திய மக்கள் விடுதலை முன்னணியின் சோமவன்ச அமரசிங்க, “தமது கட்சி போருக்கு அஞ்சவில்லை” எனவும், “போருக்கு அஞ்சினால் சமாதானத்தை ஏற்படுத்த முடியாது,” எனவும் தெரிவித்திருந்தார்.
2005ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ச முதன்முறையாக ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியபோது, மக்கள் விடுதலை முன்னணி, புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆதரவை வெளிப்படுத்தியதோடு அவருக்கு ஆதரவாக பிரச்சாரத்திலும் ஈடுபட்டது.
போர் மீண்டும் ஆரம்பம்
ஜூலை 2006இல் மஹிந்த ராஜபக்ச யுத்தத்தை மீண்டும் ஆரம்பித்த பின்னர், மஹிந்தவின் பெரும் இராணுவ வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாகவும் மக்கள் விடுதலை முன்னணி வாக்களித்திருந்தது.
2010ஆம் ஆண்டில் மஹிந்த ராஜபக்ச தமிழர்களை தோற்கடித்த உத்வேகத்துடன் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றதாகவும் அநுர குமார திசாநாயக்க இந்த செவ்வியில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தத் தேர்தலில் தமிழ் இனப்படுகொலைக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களில் மிகமுக்கியமானவரும், யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த இலங்கை இராணுத் தளபதியும், அப்போதைய பொது வேட்பாளருமான சரத் பொன்சோவிற்கு, மக்கள் விடுதலை முன்னணி தமது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தது.
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதாக வாக்குறுதியுடன், கடந்த 2005ஆம் ஆண்டு பதவிக்கு வந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மூன்றரை வருடங்களில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தார்.
முள்ளிவாய்க்கால் இறுதிக் கட்ட யுத்தம்
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது மாத்திரம், 40,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டதாகவும், இந்த யுத்தத்தில் மொத்தமாக ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டதாகவும் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
ஒன்றறை இலட்சம் அப்பாவி மக்களுக்கு என்ன நடந்தது என மன்னார் மாவட்டத்தின் மறைந்த முன்னாள் ஆயர் ஜோசப் ஜெனிவா மனித உரிமை சபையில் தெரிவிந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.