பிரித்தானியாவின் – பிரிஸ்டல் பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் இருந்து கத்திக் குத்து காயங்களுடன் உயிரிழந்த நிலையில் மூன்று சிறுவர்களின் சடலங்களை ஞாயிற்றுக்கிழமை இரவு பொலிஸார் மீட்டுள்ளனர்.
ஏழு வயது, மூன்று வயது மற்றும் ஒன்பது மாத குழந்தைகளே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் 42 வயதான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் பொலிஸ் பாதுகாப்பில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குழந்தைகளின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் எனவும் இந்த வார இறுதிக்குள் அந்த நடவடிக்கைகள் முடிக்கப்படும் எனவும் விசாரணை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பொலிஸார் இதை ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சம்பவமாக கருதுவதுடன், சமூகத்திற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை எனவும் கூறியுள்ளனர்.
“இதுபோன்ற இளம் குழந்தைகளின் மரணம் முழு சமூகத்திற்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,
இந்த சம்பவம் காவல்துறையில் உள்ள அனைவருக்கும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று விசாரணை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
எவ்வாறாயினும், உயிரிழந்தவர்கள் சூடானிய சமூகத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகின்றது.
“பிரிஸ்டலில் மட்டுமல்ல, இங்கிலாந்து முழுவதும் உள்ள சூடானிய சமூகமும் இதனால் அதிர்ச்சியடைந்துள்ளது.” என விசாரணை அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த சம்பவத்தை அடுத்து அந்தப் பகுதியில் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், துரித விசாரணைகள் முன்னெக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணை அதிகாரிகள் மேலும் கூறியுள்ளனர்.