மக்களால் கைவிடப்படும் தமிழ்த் தேசிய கட்சிகள்

கட்சி அரசியலை மையமாக் கொண்டே தமிழ்த் தேசிய கட்சிகள் செயற்பட்டுவருகின்றமை அண்மைக்கால பல நிகழ்வுகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளன.

அடுத்த மாதம் ஜெனிவா மனித உரிமை கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், ஈழத்தமிழினத்திற்கு எதிராக இலங்கை இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான விடயங்களை சபையில் கையாளக்கூடிய தமிழ் அரசியல்வாதிகள் தமக்குள் பதவிக்காக போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் ஈழத்தமிழர் தொடர்பான விடயங்களை தமது அரசியலுக்காக கனகச்சிதமாக கையாண்டுவருகின்றன.

இலங்கையினை தமது பிடியினுள் வைத்துக்கொள்ளவும், சீனாவின் கால்லூண்றலைக் கட்டுபடுத்தவும் அவ்வப்போது இந்தியா ஈழநலன் தொடர்பில் அரசியல் காய்களை நகர்த்தி வருகின்றது.

ஒட்டுமொத்தமாக ஈழத் தமிழினத்திற்கான அரசியல் நலன்களை சர்வதேசமோ அல்லது பிராந்திய வல்லரசான இந்தியாவோபெற்றுத்தரப் போவதில்லை.

மாறாக தமக்கான அரசியல் தேவைகளுக்காக ஈழத்தமிழினத்தினைப் பயன்படுத்திக் கொள்ளும் போக்கே தொடர்கின்றது.

இத்தகைய அரசியல் நகர்வுகளை இராஜதந்திர ரீதியாக கையாண்டு உலக வல்லரசுகளின் போக்கில் மாற்றங்களை கொண்டுவந்து ஈழத்தமிழர் சார்பு நிலையினை எட்டவைக்கும் காரியங்களை ஆற்றுவதற்கு தமிழ்த் தேசிய கட்சிகள் செயற்பாடாமையானது தென்னிலங்கையின் கடும் போக்குவாதத்திற்கு மேலும் வலு சேர்ப்பதாக அமைந்துள்ளதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

தென்னிலங்கையின் சலுகை அரசியல்

கட்சிகளின் பதவிப் போட்டி காரணமாக தமிழ்த் தேசிய கட்சிகள் மக்கள் மத்தியில் செல்வாக்கினை இழக்கும் போக்கு காணப்படுவதுடன் தென்னிலங்கை கட்சிகளின் சலுகை அரசியலுக்குள் மக்கள் விரும்பியோ, விரும்பாமலோ தள்ளப்படும் துர்ப்பாக்கிய நிலை ஏற்படும்.

ஏற்கனவே தென்னிலங்கை சிங்கள கட்சிகளின் தமிழ் உறுப்பினர்கள் காணப்படும் நிலையில் மேலும் அந்த எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட போர் குற்றம் மற்றும் யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறல் விடயத்தில் சிங்கள கட்சிகள் ஒரே நிலைப்பாட்டில் நின்று செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் தமிழ்த் தேசிய கட்சிகள் ஒன்றுக்கொன்று முரண்பாடுடன் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் தமிழ்த் தேசிய கட்சிகள் தென்னிலங்கை ஆட்சியாளர்களின் கொள்கைகளுக்கு ஏற்ப செயற்படுகின்றார்களோ என்ற அச்சமும் தற்போது மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

தேர்தல் காலங்களில் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக் கொள்ளவும், ஜனாதிபதி தேர்தல்களின் போது தென்னிலங்கை தலைவர்களுக்கு தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொடுக்கவும் புதிதாக பல சாட்டுக் கதைகளையும் விடுதலைப் போராட்டத்தையும் பேசிக்கொண்டு வருவார்கள் என மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

ஆகவே இனிவரும் காலங்களில் இத்தகைய தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளுக்கு மக்கள் தக்க பாடம் கற்பிப்பார்கள் என்பதே திண்ணம்.

Recommended For You

About the Author: admin