இலங்கையின் இறையாண்மையை பாதுகாக்க அமெரிக்கா தொடர்ந்தும் உதவும் என தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூ (Donald Lu)தெரிவித்துள்ளார்.
இந்தோ-பசிபிக் மூலோபாயம் குறித்து அமெரிக்க அமைதி நிறுவனத்தில் (USIP) பேசிய டொனால்ட் லு, இலங்கைக்கு ரோந்து படகுகள் மற்றும் விமானங்களை வழங்குவதன் மூலம் இது செயல்படுத்தப்படும் என்றும் கூறினார்.
“அமெரிக்க அரசாங்கம் இலங்கை இராணுவத்திற்கு ரோந்துப் படகுகளை வழங்கும். இலங்கையின் கரையோர எல்லைகளில் ரோந்து செல்ல உதவும் கிங் விமானத்தையும் இந்த ஆண்டு வழங்க உள்ளோம்,”
இந்தோ-பசிபிக் கடல்சார் கள விழிப்புணர்வு (IPMDA) முயற்சியின் மூலம், தெற்காசியா உட்பட இந்த பரந்த பிராந்தியத்தைச் சுற்றியுள்ள நாடுகளுக்கு நிகழ்நேர வணிக செயற்கைக்கோள் தரவை அமெரிக்கா வழங்கும் – என்றும் அவர் மேலும் கூறினார்.
இது கடற்கொள்ளையர், போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத மீன்பிடித்தல் ஆகியவற்றுக்கு எதிராக நாடுகள் எவ்வாறு தங்களைத் தற்காத்துக் கொள்ள இது உதவும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பொருளாதார மீட்சி தொடர்பான இலங்கையின் சமீபத்திய முன்னேற்றம் குறித்துப் பாராட்டிய டொனால்ட் லு, இந்தியா போன்ற பங்காளிகளுடன் இணைந்து நிர்வாகத்தின் இந்தோ-பசிபிக் மூலோபாயத்தின் வெற்றிக்கு இலங்கை ஒரு சிறந்த உதாரணம் என்றும் குறிப்பிட்டார்.