இலங்கையின் 76ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த 3ஆம் திகதி தாய்லாந்துடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) கைச்சாத்திடப்பட்டது.
ஒப்பந்தத்தின் பிரகாரம் இருநாடுகளுக்கும் இடையிலான ஏற்றுமதி, இறக்குமதி நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இந்தியாவுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தமான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை (Economic and Technology Cooperation Agreement – ETCA) விரைவாக கைச்சாத்திடும் பேச்சுகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது.
இலங்கையர்களின் வேலைவாய்ப்புகள் பறிபோகும்
அடுத்த இரண்டு மாதங்களுக்குள் எட்கா உடன்படிக்கைக்கான பேச்சுகளை முடிக்கவுக்கு கொண்டுவரவும், அதன்பின் சீனாவுடனான சுதந்திர வர்த்தகத்தை கைச்சாத்திடவும் இலங்கை திட்டமிட்டுள்ளது.
இந்தியாவுடனான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு எதிராக சில எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளியிடுவதுடன், இந்த ஒப்பந்தம் இலங்கைத் தீவில் பதற்றமான சூழலை உருவாக்க வழிவகுக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளன.
இந்திய தொழில் வல்லுனர்களின் வருகை இலங்கையர்களின் வேலை வாய்ப்புகளை ஆபத்தில் தள்ளும் அபாயம் இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.
ஐந்தாண்டு இடைவெளிக்குப் பின்னர் இலங்கை கடந்த ஆண்டு இறுதியில் எட்கா ஒப்பந்தம் தொடர்பான பேச்சுகளை மீண்டும் தொடங்கியது.
ஏப்ரலில் கைச்சாத்திடப்படும்
2016ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டுவரை எட்கா உடன்படிக்கைக்கான பேச்சுகளை இலங்கையும் இந்தியாவும் முன்னெடுத்திருந்தன.
ஆனால், இலங்கைத் தீவு முழுவதும் கடுமையான போராட்டங்களை அப்போதைய எதிர்க்கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னெடுத்தது. இதனால் பேச்சுகள் இடைநிறுத்தப்பட்டு, தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே, ஒப்பந்தம் தொடர்பான இணக்கப்பாடுகள் இறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் 13ஆவது சுற்றுப் பேச்சுகளை எதிர்வரும் மார்ச் மாதம் 12, 13ஆம் திகதிகளில் கொழும்பில் நடத்த இருநாட்டு உயர்மட்ட அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகிறது.
அமைச்சரவை அனுமதி கிடைத்தவுடன் ஒப்பந்தம் விரைவில் கைச்சாத்திடப்படும் வகையிலும், ஏப்ரல் மாத இறுதியில் பேச்சுகளை இறுதி செய்யும் நோக்கத்துடனும் 13ஆவது சுற்றுப் பேச்சுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.