ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எல்லோரும் கூறுவதை போல் தந்திரமானவர் அல்ல என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
குருநாகல் மாவட்ட மகளிர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஜனாதிபதித் தேர்தலை எந்தவகையிலும் தவிர்க்க முற்பட்டால், அவர் தமது பதவிக்காலம் முடிவதற்கு முன்னரே வீட்டிற்கு செல்ல நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாநாட்டில் தொடர்ந்து கருத்துரைத்த தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க;
”நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க வேண்டும் எனும் புதிய விவாதம் எழுந்துள்ளது. இது காலங்காலமாக எழுப்பப்படும் கோஷம்தான்.
ரணில் ஒரு தந்திரமானவர் என சிலர் சொல்கிறார்கள். அவர், பாராளுமன்றத்தில் ஒரே ஒரு ஆசனத்தின் மூலம் ஜனாதிபதியானவர். அவர் ஜனாதிபதித் தேர்தலிலும் தப்பிப்பதற்கு ஏதாவது செய்வார்.
ஜனாதிபதி பதவியை சஜித் பிரேமதாச நிராகரித்ததால்தான் ரணில் ஜனாதிபதியாக வர முடிந்தது. இல்லையெனில், ரணில் இப்போது வெறும் நாடாளுமன்ற உறுப்பினர் மாத்திரமே.
கோட்டாபய முதலில் சஜித்திடமும் பின்னர் சரத் பொன்சேகாவிடமும் ஜனாதிபதி பதவிக்கு வருமாறு கோரிக்கை விடுத்தார். பொன்சேகா முடிவெடுப்பதற்கு மூன்று நாட்களை கோரினார். கோட்டாபய தாமதிக்கும் நிலையில் இல்லை.
மூன்றாவது தெரிவாகவே ரணிலிடம் கோரிக்கை விடுத்தார். தனக்கு இழப்பதற்கு எதுவும் இல்லை என்பதால் அவர் அதை ஏற்றுக்கொண்டார்” எனது தெரிவித்துள்ளார்.