யாழ்ப்பாணத்தில் அதிகரித்த போதைப் பொருள் பாவனையால் ஒரே நாளில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மல்லாகம் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவரும் தெல்லிப்பளை, கொல்லங்கலட்டி பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதில் 30 வயதான நபர் போதைப்பொருள் வாங்க பணம் கொடுக்காததால் உயிரை மாய்த்து கொண்டதாகவும் மற்றைய நபர் ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களை கலந்து அதிகளவில் உட்கொண்டதால் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
26 வயதான நபர் முதலில் ஹெரோயில் போதைப் பொருளை பாவித்துள்ளதாகவும், பின்னர் ஐஸ் போதைப் பொருளை பாவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அவரின் வீட்டிற்கு அருகிலேயே இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்தச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, யாழ்ப்பாணம் உள்ளிட்ட வட மாகாணத்தின் பல பகுதிகளிலும் போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ள நிலையில், கடந்த காலங்களில் பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல், அதிகரித்த போதைப் பொருள் பாவனையால் இளைஞர்கள் உயிரிழக்கும் போக்கும் வடக்கு மாகாணத்தில் அண்மைய நாட்களில் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.