நாட்டின் கேந்திர முக்கியத்துவமான அனைத்து இடங்களையும் இந்தியாவுக்கு வழங்க திட்டமிட்டுள்ளனர் எனவும் எதிர்வரும் மார்ச் மாதம் எட்கா உடன்படிகை கைச்சாத்திடப்பட உள்ளது எனவும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ வெளியிட்டிருந்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இன்று (18) ஊடகங்களிடம் இதனை கூறியுள்ளார்.
இலங்கையின் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இந்தியாவில் வைத்து, இலங்கையை இந்தியாவின் ஒரு பகுதியென பகிரங்கமாக கூறியிருந்தார்.
இது சாதாரணமான கருத்து அல்ல. ஒரு நாட்டின் அமைச்சர் இன்னுமொரு நாட்டுக்கு சென்று தனது நாடு அந்த நாட்டின் பகுதி எனக்கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியுமா?. இது பாரதூரமான விடயம்.
பாராளுமன்றத்தில் உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்யும் போது, நாட்டின் இறையாண்மை மற்றும் ஐக்கியத்தை பாதுகாப்பதாக நாங்கள் உறுதியேற்கின்றோம்.
அந்த உறுதிப்பாட்டை மீறும் உரிமை அமைச்சருக்கோ, பாராளுமன்ற உறுப்பினருக்கோ கிடையாது.
ஹரின் பெர்னாண்டோவின் வாயில் இந்த வார்த்தை வந்தது வெறுமனே அல்ல. அடுத்து என்ன நடக்க போகிறது என்பதை அவர் அறிந்திருக்கின்றார். மார்ச் மாதம் எட்கா உடன்படிக்கை கைச்சாத்திடப்பட உள்ளது.
இதன் பின்னர் சேவை பொருளாதாரம், தொழில்கள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கா இந்தியர்கள் எந்த தடையுமின்றி இலங்கைக்கு வர முடியும்.
அடுத்து குழாய் மூலமான இந்தியாவின் எரிசக்தியை நம்பியிருக்கும் போது, அந்த நாடு அதனை தீர்மானிக்கும் போது, நாம் இந்தியாவை சார்ந்திருக்க நேரிடும்.
எமது துறைமுகங்கள், விமான நிலைங்கள், டெலிகொம் போன்ற பொருளாதார கேந்திர நிலையங்கள்,மின்சார சபை என அனைத்தும் இந்திய நிறுவனங்களின் கைகளுக்கு சென்றதும் என்ன நடக்கும் என்பது ஹரின் பெர்னாண்டோவுக்கு தெரியும். இதன் பின்னர் இலங்கையை இந்தியாவின் ஒரு பகுதியாக அவர்கள் மாற்றுவார்கள்.
நாட்டின் ஜனாதிபதி, ஹரின் பெர்னாண்டோவின் இந்த கருத்தை ஏற்றுக்கொள்கிறாரா இல்லையா என்பதை நாட்டுக்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் விமல் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.