அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என்று இந்தியாவில் கூறியது நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை மீறிய மற்றும் அரச விரோத கருத்து என பலர் சுட்டிக்காட்டியுள்ள நிலையில், அவரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்ற யோசனைகள் முன்வைக்கப்பட்டு வருவதாக தெரியவருகிறது.
கடந்த திங்கள் கிழமை நடைபெற்ற அமைச்சரவைக்கூட்டத்தின் போது, இந்த பிரச்சினையை எழுப்ப அமைச்சர் ஒருவர் முயற்சித்த போதிலும் அதனை மழுங்கடித்து வேறு விடயங்கள் தொடர்பான யோசனைகளை அமைச்சர்கள் சிலர் முன்வைத்துள்ளனர்.
எனினும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இந்தியாவில் வெளியிட்ட கருத்து தொடர்பாக நாட்டுக்குள் பலத்த வாதவிவாதங்கள் ஏற்பட்டுள்ளதால், அமைச்சர்கள் பலர்,குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
ஹரின் பெர்னாண்டோவை தற்காலிகமாக அமைச்சரவையில் இருந்து நீக்கி நிலைமையை சமாளிக்க நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர்கள், ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த விடயம் சம்பந்தமாக நபரோ,அணியோ உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யும் முன்னர், ஹரின் பெர்னாண்டோவின் அமைச்சு பதவி சம்பந்தமாக நடவடிக்கை ஒன்றை எடுக்க வேண்டும் என்பது அமைச்சர்களின் நிலைப்பாடாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தியாவின் மும்பாயில் அண்மையில் நடைபெற்ற வர்த்தக மற்றும் முதலீட்டாளர்களுடனான சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ,
“இலங்கையில் எண்ணெய் தாங்கிகளை இந்திய நிறுவனங்கள் பெற்றுள்ளன. எமக்கு சூரிய மின்சக்தியை விநியோகிப்பதும் இந்திய நிறுவனம்.
இதன் காரணமாக இந்தியர்கள் வெளிநாட்டுக்கு பயணம் செய்ய வேண்டுமாயின் இலங்கைக்கு பயணம் செய்யுமாறு இந்திய வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார்.
நீங்கள் மும்பாயில் உள்ள உங்கள் சொத்துக்களை விற்பனை செய்து விட்டு இலங்கையில் குடியேறுங்கள். உண்மையில் இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி” குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், இலங்கையை இந்தியாவின் ஒரு பகுதி என ஏற்றுக்கொண்டு ஹரின் பெர்னாண்டோ, வெளியிட்டுள்ள இந்த கருத்து இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தை மீறும் செயல் என சிரேஷ்ட ராஜதந்திரியும் ஜெனிவாவுக்கான இலங்கையின் முன்னாள் நிரந்திர பிரதிநிதியுமான கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
“ஹரின் பெர்னாண்டோ, இலங்கையின் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சராக இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
இது மிகவும் பாரதூரமானது. இது நேர்காணல் ஒன்றில் தவறுதலாக கூறப்பட்ட கருத்தாக எண்ண முடியாது.
உண்மையில் இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என அவர் கூறியதை தவறுதலாக கூறியதாகவோ வாய் தவறி கூறிவிட்டதாகவோ கருத முடியாது.
இப்படியான கருத்தை வெளியிட்ட நபரை அமைச்சரவையில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும்.
அப்படி செய்யவில்லை என்றால், ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம்,அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கூறியதை அங்கீகரித்துள்ளது என்று அர்த்தமாகும்” எனவும் தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.