அமெரிக்கா, சீனா, இந்தியா எம்முடனான உறவை விரும்புகின்றன

‘‘தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான எந்தவொரு விடயத்தையும் செய்யாது. ஆனால், சீனாவுடனான பொருளாதார மற்றும் அரசியல் உறவுகள் பேணப்படும்.‘‘

இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் உயர்மட்ட குழுவொன்று அண்மையில் இந்தியாவுக்குக்கு அதிகாரப்பூர்வ பயணமொன்றை மேற்கொண்டிருந்தது.

இந்தப் பயணம் தொடர்பில் கருத்து வெளியிட்ட அனுரகுமார திஸாநாயக்க,

கடந்த டிசம்பர் மாதம் இந்தியாவுக்கு வருகை தருமாறு அழைப்பு கிடைக்கப்பெற்றது. அதன் பிரகாரமே எமது பயணம் அமைந்தது.

இருப்பினும் டிசம்பரில் எங்களுக்கு வேறு அழைப்புகளும் இருந்தன. எமது கட்சியில் ஒருவர் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பின் பேரில் சீனாவுக்குச் சென்றிருந்தார்.

எங்கள் வெளியுலக உறவுகளில் முழு வெளிப்படைத்தன்மையைப் பேணுகிறோம் என இந்தியாவிடம் தெரிவித்தோம்.

அமெரிக்கர்களை அழைத்த ஜே.ஆர்.

சமகால அரசாங்கத்தின் தனியார்மயமாக்கல் கொள்கையில் சீன மற்றும் இந்தியாவின் முதலீட்டாளர்கள் ஈர்க்கப்பட்டுள்ளனர். இந்த விடயம் இரண்டு நாடுகளுக்கு இடையே இலங்கைத் தீவில் போட்டித் தன்மையை உருவாக்கியுள்ளது.

லங்கா ஹொஸ்பிட்டல் மற்றும் ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தை தனியார்மயமாக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அமுல் நிறுவனம் என்.எல்.டி.பியை வாங்க வேண்டும் என்று அரசாங்கம் விரும்புகிறது.

ஜே.ஆர்.ஜெயவர்தனவின் காலத்தில் இருந்து ஆட்சியை கைப்பற்றிய அனைத்து அரசாங்கங்களும் பேரழிவுகரமான வெளிநாட்டுக் கொள்கைகளை பின்பற்றி இலங்கையை பெரும் வல்லரசுகளுக்கு இடையேயான போர்க்களமாக மாற்றியுள்ளன.

ஜே.ஆர். அமெரிக்கர்களை இலங்கைக்கு அழைத்தார். அந்த நேரத்தில், இந்தியா சோவியத் யூனியனுடன் (ரஷ்யா) இருந்தது. இது இந்தியாவை கோபப்படுத்தியது.

அடிக்கடி எம்மை சந்திக்கும் தூதரக அதிகாரிகள்

பின்னர், ஏனைய அரசாங்கங்கள் ஒவ்வொரு நாட்டிற்கும் மதிப்புமிக்க தேசிய சொத்துக்களை விற்றன. இந்தப் போட்டியில் ஒப்பந்தங்கள் மூலம் சீனாவையும் இந்தியாவையும் சமநிலைப்படுத்த முயன்றன.

தேசிய மக்கள் சக்தி அணிசேரா வெளியுறவுக் கொள்கையை கடைபிடிக்கிறது. வெளிப்படைத்தன்மையுடன் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு விவகாரங்களில் ஈடுபடுவதே எமது நோக்கம்.

தூதரகத்தின் செயல்பாடுகளில் அடிக்கடி கலந்துகொள்ளும் சில நபர்கள் எங்களைப் பற்றிய தவறான தகவல்களை பரப்புகிறார்கள் என்பதை நாங்கள் அறிவோம்.

இந்த எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள எங்களுக்கு உண்மையில் நேரம் இல்லை. எவ்வாறாயினும், சமீபத்திய மாதங்களில், தூதரக அதிகாரிகள் எங்களைத் தொடர்பு கொண்டுள்ளனர்.

ரணிலை பற்றி அறிந்திருப்பார்கள்

ஏனென்றால், நாங்கள் தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். எங்கள் கொள்கைகள் என்ன என்பதை விளக்க இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி வருகிறோம்.

எமது அரசியல் எதிரிகள் இந்திய பயணம் குறித்து மிகவும் கவலைப்படுகிறார்கள். இந்தப் பயணம் எமது கட்சி பற்றிய இந்தியாவின் நிலைப்பாற்றை அகற்றியுள்ளது.

தேசிய மக்கள் சக்திக்கு சர்வதேச தொடர்புகள் அல்லது சர்வதேச உறவுகள் தொடர்பில் நிலைப்பாடு இல்லை என கூறிவந்தனர். அதற்கும் எமது சந்திப்புகள் பதில் வழங்கியிருக்கும்.

இந்தியா, சீனா, அமெரிக்கா மற்றும் பல நாடுகள் இப்போது எங்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றன. நாங்கள் தேர்தலில் வெற்றி பெறுவோம் என அந்த நாடுகள் நினைக்கின்றன.

ரணிலுக்கு தனிப்பட்ட முறையில் வெளிநாட்டுத் தலைவர்கள் தெரியும், அவர் நாட்டைப் மீட்டு எடுப்பார் என்று சிலர் நம்பினர். அந்த விடயம் பொய் என்பதை அறித்திருப்பார்கள். நாங்கள் ஆட்சிக்கு வருவதை தடுக்க எதையும் செய்வார்கள்.‘‘ என்றும் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

Recommended For You

About the Author: admin